No products in the cart.
ஜனவரி 14 – இருதயம் ஸ்திரப்படட்டும்!
“கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங். 27:14).
ஓங்கி உயர்ந்து வளருகிற மரங்கள் ஸ்திரமாய் விளங்க அதன் ஆணி வேர்கள் ஆழமாகவும், உறுதியாகவுமிருப்பது அவசியம். அதுபோல, ஆவிக்குரிய வாழ்க்கையிலே ஸ்திரப்படுவதற்கு கர்த்தருடனேகூட ஆழமான ஜெப ஜீவியம் அவசியமாயிருக்கிறது.
சிலர் முப்பதுவருட கிறிஸ்தவர்களாய் இருப்பார்கள். ஆனால், சிறிய உபத்திரவம் வந்தாலும் கர்த்தரை மறுதலித்துவிடுவார்கள். ஒவ்வொருமுறையும் தேவஊழியர்கள் வந்து வாக்குத்தத்த வசனத்தைக் கொடுத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, மறுபடியும் கர்த்தருக்குள் கொண்டுவரவேண்டியதிருக்கும்.
யுத்தத்தில் ஸ்திரமான உள்ளம் இல்லாவிட்டால், அவன் கோழையைப்போல புறமுதுகிட்டு ஓடிவிடுவான். படிப்பிலே ஸ்திரம் இல்லாதவன் தோல்வியை எண்ணி தேர்வை எழுதாமலேயிருந்துவிடுவான். எந்தக் காரியத்திற்கும் ஸ்திரமான உள்ளம் அவசியம்.
அப். பேதுரு விசுவாசிகளுக்கு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேது. 5:10).
சரீரத்தை ஸ்திரப்படுத்த மருத்துவர்கள் ஊட்டச்சத்து மருந்துகளை எழுதிக்கொடுக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும்படி சொல்லுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றையும்விட இருதயம் ஸ்திரப்படுதல் அவசியம். அது நாணலைப்போல அங்குமிங்கும் அசைந்துகொண்டிருக்கமுடியாது. அப். பவுல் எழுதுகிறார், “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். …. கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது” (எபி. 13:9).
ஒரு பக்கம் கர்த்தருக்குக் காத்திருப்பது இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறது. மற்றொரு பக்கம் கர்த்தருடைய கிருபை இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறது. தேவபிள்ளைகள் தங்களைக் கர்த்தர் ஸ்திரப்படுத்துவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். அதற்குப் பொறுமை மிக மிக அவசியம்.
அவசரமான இந்த உலகத்தில் கர்த்தருக்கு நீடிய பொறுமையோடு காத்திருப்பது சற்று கடினமான காரியம்தான். கர்த்தருக்கு காத்திருக்காதவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காதா, தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று அரசியல்வாதிகளின் பின்னே சென்று காத்திருந்து, சோர்வடைகிறார்கள். நாசியிலே சுவாசமுள்ள மனுஷர்களை நம்புவதற்கு அவன் எம்மாத்திரம்?
ஆனால் தாவீதைப் பாருங்கள், அவருடைய இருதயம் கர்த்தருக்குள் ஸ்திரமாய் இருந்தது. அவர் சொல்லுகிறார்: “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்” (சங். 40:1-3).
தேவபிள்ளைகளே, “நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” (யாக். 5:8).
நினைவிற்கு:- “நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை” (ஏசா. 54:14).