Appam, Appam - Tamil

ஜனவரி 12 – கசப்பான கனிகளா?

“அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?” (ஏசா. 5:4).

ஏசாயா தீர்க்கதரிசி தமது புத்தகத்தின் 5ம் அதிகாரத்தில் கர்த்தருக்கு செழிப்பான மேட்டிலே இருந்த ஒரு திராட்சத்தோட்டத்தைப்பற்றிய பாடல் ஒன்றைப் பாடுகிறார். கர்த்தர் அந்த தோட்டத்துக்கு வேலியடைத்து, கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவிலே ஒரு கோபுரத்தையும் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல பழங்களைத் தரும் என்று காத்திருந்தார். ஆனால், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

கர்த்தர் பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் இஸ்ரவேல் ஜனங்களைத் தமக்கென்று சொந்தமாய் தெரிந்துகொண்டார். ஆகவே, இஸ்ரவேல் என்னும் திராட்சச்செடியைக் கொண்டுவந்து தம்முடைய தோட்டத்திலே நாட்டினார். ஒருவேளை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குத்தக்கதாக பன்னிரண்டு கிளைகளை அவர் நாட்டியிருந்திருக்கக்கூடும்.

வேதம் சொல்லுகிறது, “சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே. அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே” (ஏசா. 5:7). ஆனால் ஏன் அவர்கள் ஆண்டவருக்கு கசப்பான கனிகளைக் கொடுத்தார்கள்? நல்ல மதுரமான கனிகளைக் கொடுத்திருக்கக்கூடாதா?

ஒரு மாமரம் நல்ல கனிகளைக் கொடுத்துவந்தது. அது திடீரென்று கசப்பான கனிகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. காரணம் என்ன தெரியுமா? அந்த மாமரத்தைச் சுற்றிலும் வேப்பமரங்கள் இருந்தன. இந்த வேப்பமரத்தின் வேர்கள் எல்லாம் மாமரத்தின் வேரோடு பின்னிப் பிணைந்துவிட்டபடியினால் வேப்பமரத்தின் கசப்பு மாமரத்துக்குள் வந்துவிட்டது. கசப்பான மாராவின் தண்ணீர்களண்டையில் நிற்கும் எந்த மரமானாலும் அது கசப்பான கனிகளைத்தானே கொடுக்கும்!

உலகமே அசுத்தத்திற்குள் கிடக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் உலகத்தாருடைய நாகரீகத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கைக்கொண்டு, அது அவர்களுக்குள் கலந்ததினால், உலகத்தாரின் கசப்பான சுபாவங்கள் இஸ்ரவேலருக்குள் வந்துவிட்டன. அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியிலே வாசம்பண்ணின ஏசாயாவின் உதடுகளும் அசுத்தமாகவில்லையா? (ஏசா. 6:5).

கிராமங்களிலே நல்ல தேன் கிடைக்கும். சில மாதங்களில் தேனிலே இனிமையோடுகூட ஒரு கசப்பும் கலந்திருக்கிறதை ருசித்து அறியலாம். தேன் கசப்புள்ளதாய் இருக்கும் காலம் எது? வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கும் காலம் வரும்போது தேனீக்கள் அதிலிருந்து கொண்டுவரும் கசப்பு கலந்த தேன், மற்ற மரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தேனையும்கூட கசப்பாக்கிவிடும். அப்படித்தான் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கசப்பான கனிகளைக் கொடுத்தார்கள்.

ஆனால் கர்த்தரோ, தாமே நமக்காக திராட்சச்செடியாக மாறத் தீர்மானித்தார். பாவம் அறியாத, பரிசுத்தமுள்ள, பரலோக தேவனுடைய செல்லப்பிள்ளையான அவர் பூமிக்கு இறங்கி வந்து, நமக்காக நடப்பட்ட திராட்சச்செடியாக மாறினார். தேவபிள்ளைளே, நீங்கள் மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்துவிலே ஒட்டப்பட்டு கிளைகளாக அவரிலே நிலைத்திருங்கள்.

நினைவிற்கு:- “என்னில் நிலைத்திருங்கள்; நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவா. 15:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.