No products in the cart.
ஜனவரி 10 – ஆலையை உண்டுபண்ணி!
“அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி ….” (ஏசா. 5:2).
நாம் ஆண்டவருக்குச் செய்கிறதைப்பார்க்கிலும் ஆண்டவர் நமக்காக செய்கிறது ஆயிரமடங்கு அதிகமானவை. நம்மேல் அவர் வைத்திருக்கிற அன்பு ஈடுஇணையற்றது. நமக்காக அவர் செய்த தியாகங்களை வார்த்தையினால் வர்ணிக்கமுடியாது.
‘ஆலையை உண்டுபண்ணி’ என்று இங்கே எழுதியிருக்கிறார். ஆலை என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒலிவ விதையிலிருந்து எண்ணெய் எடுக்கக்கூடிய ஆலைகள் உண்டு. எள்ளைப் பிழிந்து எண்ணெய் எடுக்கும் ஆலைகளும் உண்டு. கோதுமை, அரிசி போன்றவற்றை மாவாக அரைக்கும் ஆலைகளும் உண்டு. ஆனால் இங்கே சொல்லப்படுகிற ஆலை திராட்சப்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கக்கூடிய ஆலை. திராட்சப்பழம் பிழியப்படும்போது அதிலுள்ள சாறு செந்நிறமாய் வடிகிறது. ஆலையில் பழங்கள் கசக்கிப் பிழியப்படுகிறது.
நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த ஆலையின் வழியாகக் கடந்துசென்றார். அவர் பாடுகளையும், துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார். அந்த ஆலையில் திராட்சப்பழம் பிழியப்படுகிறதுபோல இயேசுவும் முள்முடி சூட்டப்பட்டு, கோலினால் தலையில் அடிக்கப்பட்டார். அவரது காயங்களிலிருந்து இரத்தம் திராட்சைச்சாறுபோல வழிந்தது. கொடிய சவுக்குகளும், கொடூரமான ஆணிகளும், ஈட்டியின் குத்துக்களும் அவரைப் பிழிந்தன. ஏசாயா தீர்க்கதரிசி இதனை தம் தரிசனக் கண்களால் கண்டு “அவர் நொறுக்கப்பட்டார்” என்று குறிப்பிடுகிறார் (ஏசா. 53:5).
உன்னதப்பாட்டை ஆக்கியோன் அவர் ஆலையில் பிழியப்படுகிற காட்சியை நோக்கிப்பார்த்துவிட்டு “உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது” என்று குறிப்பிடுகிறார் (உன். 1:2). ஆதியிலிருந்தே கர்த்தர் பலவிதங்களில் தகப்பனாக, சகோதரனாக, ஆலோசனைக் கர்த்தராக, சிநேகிதனாக நம்மிடத்தில் அன்பு கூர்ந்திருந்தாலும், சிலுவையில் நம்மேல் செலுத்தின அன்பு மகா விசேஷமானதாகும். தன்னையே பிழியப்படும்படி ஒப்புக்கொடுத்த அந்த அன்பு மகிமையானது. அது அவரது நேசத்தின் உச்சிதத்தையெல்லாம் வெளிப்படுத்தின அன்பு. அந்த அன்புக்கு ஈடு இணையானது வேறு ஒன்றுமேயில்லை.
நிந்தைகளும், அவமானங்களும் அவரைச் சூழ்ந்துகொண்டன. அவருடைய முகத்தில் காறித் துப்பினார்கள். தாடி மயிரை சேர்த்துப் பிடுங்கி எடுத்தார்கள். அலங்கோலமாக்கினார்கள். ஆயிரம், பதினாயிரம்பேரிலும் சிறந்த அவர் அந்தக் கேடடைந்தார். முற்றிலும் அழகுள்ள அவர் அழகுமில்லாமல் சௌந்தரியமும் இல்லாமல் காணப்பட்டார். கொடூரமான சம்மட்டியைக்கொண்டு அவருடைய கையை உருவக்குத்தி ஆணிகளால் கடாவினார்கள். இரண்டு கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டன. போர்ச் சேவகர்களில் ஒருவன், அவருடைய விலாவிலே ஈட்டியாலே குத்தினபோது அங்கிருந்து தண்ணீரும் இரத்தமும் புறப்பட்டு வந்தது.
தேவபிள்ளைகளே, உங்களுக்காக இயேசு தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தினார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, நம்முடைய பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தார். அவரையே நோக்கிப்பாருங்கள்.
நினைவிற்கு:- “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசா. 53:4).