No products in the cart.
செப்டம்பர் 22 – தனிப்பட்ட அழைப்பு!
“அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா …. என்றார்” (லூக். 19:5).
கர்த்தர் சகேயுவை அழைத்தது, ஒரு விசேஷ அழைப்பு ஆகும். அந்த அழைப்பு தனிப்பட்ட ஒரு அழைப்பும்கூட. திரள் கூட்டம் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாலும், ‘சகேயுவே’ என்று தனிப்பட்ட முறையிலே ஆண்டவர் அவரைப் பேர்சொல்லி அழைத்தார்.
முழு உலகத்தையும் கர்த்தரே சிருஷ்டித்திருந்தாலும், தனிப்பட்ட முறையிலே அவர் நம் ஒவ்வொருவருக்கும் தேவனாயிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளைக்கூட அவர் அறிந்திருக்கிறார். அதினின்று விடுதலையாக்கவே, உங்களைப் பேர்சொல்லி அழைத்திருக்கிறார்.
சகேயுவே, நீ மரத்திலே இலைகளின் மத்தியிலே மறைந்திருக்க முடியாது. நீ உன்னை அநாதைபோல எண்ணிக்கொண்டிருக்கமுடியாது. நீ என்னுடைய பிள்ளை. உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே நான் உன்னைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். தாயின் வயிற்றிலே முன்குறித்திருக்கிறேன். நீ என்னுடையவன், நான் உன்னுடையவர் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சின்ன சாமுவேலை, கர்த்தர் ஒரு இரவு பேர்சொல்லி அழைத்து, பேசி உறவாடியபோது, சாமுவேலுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும்! அவனுடைய பெற்றோர் மிகச் சிறிய வயதிலேயே அவனை ஆலயத்திலே கொண்டுவந்து விட்டுவிட்டுப், போய்விட்டார்கள். வருஷத்துக்கு ஒரு முறைதான் ஒரு சிறிய சட்டை தைத்துக்கொண்டு பார்க்க வந்திருப்பார்கள். ஆனால் கர்த்தரோ, நினையாத நேரம் சாமுவேலோடு வந்து பேசினார்.
கர்த்தரிடம் மனந்திறந்து உங்களுடைய பிரச்சனைகளையும், போராட்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். உலகத்தாரோடு பகிர்ந்துகொண்டால், அவர்கள் அதை எல்லோருக்கும் வெளிப்படுத்தி உங்களை கேலிக்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆனால் கர்த்தரோ, உங்களை அறிந்து உங்களுக்கு நன்மை செய்வார்.
கோடிக்கணக்கான மக்களிருந்தாலும், தனிப்பட்ட முறையிலே நிக்கொதேமுவை தெரிந்துகொண்டு, இரவுநேரம் என்றும் பாராமல், நிக்கொதேமுவின் எல்லா கேள்விகளுக்கும் கர்த்தர் பதில் சொன்னார் (யோவா. 3:1-3). தனிப்பட்ட முறையிலே சமாரியா ஸ்திரீக்கு புது வாழ்வு கொடுக்கும்படியாக, மத்தியான வேளையிலே, சமாரியா கிணற்றோரம் அமரவில்லையா? அவளை மனந்திரும்பச் செய்யவில்லையா? (யோவா. 4:8).
முப்பத்தெட்டு வருடமாய் வியாதியாய் இருந்த ஒரு மனிதனைத் தேடி, கிறிஸ்து பெதஸ்தா குளத்துக்குப் போனார். அவனுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. பெதஸ்தா குளம் கலக்கப்படும்போது, அவனைக் குளத்தில் கொண்டுபோய் இறக்குவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. அந்த சூழ்நிலையில் அன்போடு அவனிடம் “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்று சொல்லி அற்புதம் செய்த இயேசு, தனிப்பட்ட முறையிலே உங்களையும் நேசிக்கிறார், உங்களுக்கும் அற்புதம் செய்வார்.
லேகியோன் என்னும் பிசாசு பிடித்த மனிதன் கல்லறைகளின் மத்தியிலே தனியாய் இருக்கிறதை அறிந்து, கெனேசரேத்துக் கடலோரம் அவனை தேடிச்சென்றார். ‘மார்த்தாளே, மார்த்தாளே’ என்று சொன்னவர், ‘சீமோன் பேதுருவே’ என்று அழைத்தவர், தனிப்பட்ட முறையிலே உங்களையும் பேர்சொல்லி அழைக்கிறார். அவருடைய அன்பின் குரலுக்கு செவிசாய்ப்பீர்களா?
நினைவிற்கு:- “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1).