Appam, Appam - Tamil

செப்டம்பர் 19 – தேவதூதரும், துதியும்!

“தேவரீர் …. பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்” (வெளி. 5:9,10).

பரலோகத்தில் தேவதூதர்கள் பாடுகிற பாடல்களுண்டு; மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள் பாடுகிற பாடல்களுமுண்டு. இந்த இரண்டுவகைப் பாடல்களிலும், பூமியிலிருந்து கர்த்தருக்காக மீட்கப்பட்டவர்கள் பாடுகிற பாடலோ, மகா இனிமையுள்ளதும், உள்ளத்தைப் பூரிக்கச்செய்கிறதுமாயிருக்கிறது.

தேவதூதர்களால், “நான் பாவியாயிருந்தேன். என்னை மீட்டுக்கொண்டீர்” என்று பாடவே முடியாது. மீட்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாமோ, நம்முடைய மீட்புக்காக கிறிஸ்து செய்த மிகப்பெரிய தியாகத்தையும், கிரயமாக அவர் கொடுத்த விலையேறப்பெற்ற இரத்தத்தையும் அறிந்திருக்கிறோம்.

பரலோகத்தில் தேவதூதர்கள் பாடுகிற பாட்டெல்லாம் ஒரே மாதியானவைதான். ஆனால் பூமியிலிருந்து பரலோகத்திற்குப் போகிற பரிசுத்தவான்கள், ஒவ்வொருவருடைய அனுபவமும் வித்தியாசமானது. புதிது புதிதானது.

வேதம் சொல்லுகிறது, “தேவரீர் நீர் பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி. 5:9,10).

கர்த்தர் தேவதூதர்களிலும் நம்மை மேன்மைப்படுத்தினார். தேவதூதர்களை கர்த்தர் இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கவில்லை. ஆனால், நம்மையோ இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார். சங்கீதக்காரர் சொல்லுகிறார், “மகிமையினாலும், கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).

பெரிய பெரிய தூதர்களையெல்லாம், இரட்சிப்பை சுதந்தரிக்கப்போகிறவர்களுக்கு பணிவிடை ஆவிகளாக கர்த்தர் கொடுத்திருக்கிறார். இவ்வளவு கிருபை பாராட்டின ஆண்டவர் துதிக்குப் பாத்திரர் அல்லவா?

தாவீது இராஜா சொல்லுகிறார், “கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்” (சங். 48:1). “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன். அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்” (சங். 18:3).

உங்களுடைய சத்துருக்களின் கைகளிலிருந்து நீங்கள் நீங்கலாகி மீட்கப்படவேண்டுமா? விடுதலையடையவேண்டுமா? கர்த்தரைத் துதியுங்கள். அப்பொழுது துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர் (சங். 22:3) இறங்கி வந்து உங்களுக்கு விடுதலையைத் தருவார்.

தேவபிள்ளைகளே, உங்கள் வீடு இருளாயிருக்கவேண்டிய அவசியமில்லை. மந்திரவாதிகளுக்கும், சூனியங்களுக்கும் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. செய்வினை செய்துவிட்டார்களே, கெட்ட சொப்பனம் வருகிறதே, கெட்ட கனவுகள் வருகிறதே என்று கலங்கவேண்டியதில்லை. கர்த்தரை நன்றாகத் துதித்துவிட்டு படுக்கும்போது, உங்களுடைய நித்திரை இன்பமாயிருக்கும். பரலோக தரிசனத்தைக் காணச்செய்யும்.

நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.