Appam, Appam - Tamil

செப்டம்பர் 15 – தூதனானவர்!

“கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு ….” (ஆதி. 16:7).

நாம் கர்த்தருடைய குடும்பத்திலே இருக்கிறோம். கர்த்தருடைய குடும்பம் மிகப்பெரிய குடும்பம். பரலோகத்திலுள்ள கர்த்தருடைய குடும்பத்தில், கோடிக்கோடியான தேவதூதர்கள் இருக்கிறார்கள். கேருபீன்களும், சேராபீன்களும் இருக்கிறார்கள். பரமசேனையின் திரள் இருக்கிறது. பூமியிலே, கர்த்தருடைய குடும்பத்திலே, எண்ணற்ற தேவபிள்ளைகளும், ஊழியக்காரர்களும் இருக்கிறார்கள்.

பூமியிலே இரட்சிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கர்த்தர் ஒரு தூதனை பொறுப்பாக நியமித்திருக்கிறார். ஆகவே இயேசு சொன்னார்: “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத். 18:10),

“இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபி. 1:14).

“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்” (சங். 91:11,12). பாருங்கள், ஆகார் என்ற அடிமைப்பெண் சாராளிடம் கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு ஓடிப்போனபோது, கர்த்தருடைய தூதர்களில் ஒருவன் அவளைச் சந்தித்தான்.

லோத்து சோதோமிலே இருக்கும்போது, அவனுடைய குடும்பத்தைக் காப்பாற்ற இரண்டு தூதர்கள் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்த லோத்து அவர்களைக் கண்டு, தரைமட்டும் குனிந்து வணங்கினான் (ஆதி. 19:1).

ஆனால், ஆபிரகாமைச் சந்திக்க வந்தபோது, மூன்று தூதர்களாக (மூன்று புருஷராக) தரிசனமானார்கள் (ஆதி. 18:1,2). சிலருக்கு கர்த்தர் ஐந்து தூதர்களையும், சிலருக்குப் பத்து தூதர்களையும், சிலருக்கு நூறு தூதர்களையும் அனுப்பக்கூடும்.

ரோமப்பட்டாளத்தில் நூற்றுக்கதிபதிகள் இருந்தார்கள். ஆறாயிரம் பேருடைய சேனையிருந்தது. அதை ஒரு “லேகியோன்” என்று சொல்லுவார்கள். சில மந்திரவாதிகள் ஏவல் செய்ய, நூறு குட்டிச் சைத்தான்களை வைத்திருப்பார்கள். நானும், ஒரு நூற்றுக்கதிபதிதான் என்று அவன் சொல்லுவான். அவனுடைய சதிகளை உடைத்து, நொறுக்கி, விடுதலையாக்க, கர்த்தர் தம்முடைய ஊழியக்காரருக்கு நூறு தூதர்களை கட்டளையிட்டு அனுப்புவார்.

இயேசு பேதுருவினிடத்தில், “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” என்று சொன்னார் (மத். 26:53).

லாசரு மரித்தபோது, அவனை ஆபிரகாம் மடிக்கு கொண்டுசெல்ல, கர்த்தர் தம்முடைய ஒரு தேவதூதனை அனுப்பினார் (லூக். 16:22). ஆனால், ஸ்தேவான் இரத்த சாட்சியாய் மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்தபோது, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பவில்லை. தாமே பிதாவின் வலதுபாரிசத்தில் எழும்பி நின்று, அவனை வரவேற்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களாய் மரிக்கும்போது, இயேசுகிறிஸ்துதாமே ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களோடும் வருவார். முழுப்பரலோகமும் உங்களை கைதட்டி வரவேற்கும்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங். 34:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.