No products in the cart.
செப்டம்பர் 14 – திடப்படுத்தும் அழைப்பு!
“திடன்கொள், .. உன்னை அழைக்கிறார் என்றார்கள்” (மாற். 10:49).
பிறவிக்குருடனான பர்திமேயுவை அழைத்துக்கொண்டு வந்தவர்கள் பேசின முதல் வார்த்தை ‘திடன்கொள்’ என்பதாகும். இந்த வார்த்தை பர்திமேயுவுக்கு நம்பிக்கையூட்டியது. உள்ளத்தில் விசுவாசத்தைக் கொண்டுவந்தது. திடன்கொள் என்கிற வார்த்தையானது, இனிமேல் என்னால் எதுவும் முடியாது என்று தளர்ந்துபோயிருக்கிற ஒரு விசுவாசியை, ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு’ என்று சொல்லவைக்கிற வார்த்தையாகும்.
மோசேக்குப் பிறகு யோசுவாதான் இஸ்ரவேலரைத் தலைமைதாங்கி, வழிநடத்திச் செல்லவேண்டுமென்று கர்த்தர் விரும்பினார். கானானிலுள்ள ஏழு ஜாதிகளையும், முப்பத்தொரு இராஜாக்களையும் வெல்வதற்கு இஸ்ரவேலரை யோசுவாதான் யுத்தத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்.
ஆகவே, கர்த்தர் மோசேயைப் பார்த்து, ‘யோசுவாவைத் திடப்படுத்து, அவனே கானானை இஸ்ரவேலருக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்’ என்று சொன்னார். “மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்” (உபா. 34:9). ஆம், கர்த்தர் ஊழியர்கள்மூலமாக நம்மைத் திடப்படுத்துகிறார்.
இரண்டாவதாக, கர்த்தர் தேவதூதர்கள் மூலமாகவும் நம்மைத் திடப்படுத்துகிறார். தேவதூதர்களை நமக்குப் பணிவிடை ஆவிகளாய்த் தந்திருக்கிறார் அல்லவா? (எபி. 1:14). தானியேல் ஒருமுறை சோர்ந்துபோனபோது, தானியேலைத் திடப்படுத்த கர்த்தர் தம்முடைய தேவதூதனை அனுப்பினார். “பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்” (தானி. 10:19). அப்பொழுது தானியேல் திடங்கொண்டு, ‘என் ஆண்டவர் பேசுவாராக. என்னைத் திடப்படுத்தினீரே’ என்றான்.
மூன்றாவதாக, சகோதரர்கள் நம்மைத் திடப்படுத்துகிறார்கள். கர்த்தருடைய குடும்பத்திலே இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நமக்கு சகோதரர்களாயும், சகோதரிகளாயும் இருக்கிறார்கள். “இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (சங். 133:1–3).
வேதம் சொல்லுகிறது, “ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்” (ஏசா. 41:6). கர்த்தர் நம்மை சகோதரர் என்று அழைக்க வெட்கப்படுவதில்லை. ஆம், அவரே நம்மைத் திடப்படுத்துகிற நம்முடைய மூத்த சகோதரனாய் இருக்கிறார் (எபி. 2:11).
கடைசியாக, நம்மைத் திடப்படுத்துகிற இனிமையான அன்பு கிறிஸ்துவுக்கு உண்டு. இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு சீஷர்கள் திடனற்றுப் போனார்கள். இயேசு அவர்களை திடப்படுத்தும்படி அன்போடு அங்கே வந்தார். அவர் தம் காயப்பட்ட கரத்தை அவர்களுக்கு நேராய் நீட்டினார். துளையிடப்பட்ட அவருடைய கைகளையும், கால்களையும் சீஷர்கள் கண்டார்கள். கர்த்தருடைய கல்வாரி அன்பு அவர்களுக்குள் பொங்கி வந்தது. கர்த்தர்மேல் ஆழமான விசுவாசம் வைத்தார்கள். தேவபிள்ளைகளே, இன்றைக்கும் கிறிஸ்துவினுடைய காயப்பட்ட கரங்கள் உங்களைத் திடப்படுத்துகிறது, தேற்றுகிறது.
நினைவிற்கு:- “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” (1 சாமு. 30:6).