No products in the cart.
செப்டம்பர் 13 – எரிந்து பிரகாசி!
“புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்” (மத். 25:8).
எண்ணெயின் முக்கியமான உபயோகங்களில் ஒன்று, அது தீவட்டிகளை பிரகாசிக்கச் செய்வதே. எலியா ஆண்டவருக்காக எரிந்து பிரகாசித்தார். யோவான் ஸ்நானகன் எரிந்து பிரகாசிக்கும் விளக்காய் இருந்தார். காரணம், அவர்களுக்குள்ளே அபிஷேக எண்ணெய் இருந்தது.
மத்தேயு 25-ம் அதிகாரத்திலே, புத்தியுள்ள கன்னிகைகளையும், புத்தியில்லாத கன்னிகைகளையும் பார்க்கிறோம். ஐந்து கன்னிகைகள் ஒரு புறமும், மேலும் ஐந்து கன்னிகைகள் மறுபுறமும் மணவாளனுக்காக தங்கள் கைகளில் தீவட்டியுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு கூட்டத்தாருக்கும் இடையிலே ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. ஒரு கூட்டத்தார் தீவட்டிக்கான எண்ணெயுடன் இருந்ததும், மறு கூட்டத்தாரிடம் அது இல்லாததும்தான் அந்த வித்தியாசம். ஒரு கூட்டத்தாரிடம் எண்ணெய் தீர்ந்ததினால் தீவட்டி எரியவில்லை. தீவட்டி எரியாததினால் அவர்களால் மணவாளனைச் சந்திக்க முடியவில்லை. இருளுக்குள் நிற்க வேண்டியதாயிற்று. கதவும் அடைபட்டுப் போயிற்று.
கர்த்தருடைய வருகையில் ஒரு கூட்ட மக்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இன்னொரு கூட்ட மக்கள் கைவிடப்படுவார்கள். எண்ணெய் இல்லாத காரணத்தினால்தான் கைவிடப்படுவார்கள். “ஆயத்தப்படு” என்று சொல்லி, கொடுக்கப்பட்ட நாட்கள் முடிவடைந்துபோய்விட்டன. இனி எண்ணெயோடு ஆயத்தமாயிரு என்று சொல்லுகிற நாட்களுக்குள் வந்திருக்கிறோம். வருகை வந்த பிறகு எண்ணெயை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்க முடியாது. ஆகவே இந்த கிருபையின் காலத்திலே நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அந்த எண்ணெயினால் நிரப்பிக்கொள்ளுவோமாக!
புத்தியில்லாத கன்னிகைகள் கெஞ்சிக் கடனாகக் கேட்டும் அவர்களுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை. ஒன்றை திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். மற்றவர்களின் அபிஷேகத்தை கைமாற்றாகவோ, கடனாகவோ வாங்க இயலாது. மற்றவர்களின் அபிஷேகத்தை சார்ந்துகொண்டு மணவாளனை எதிர்கொண்டுபோகவும் முடியாது.
இந்த கிருபையின் நாட்களிலே உங்கள் பாத்திரத்தில் அபிஷேகம் நிரம்பியிருக்கட்டும். காலைதோறும் கர்த்தர் தமது புதிய கிருபைகளை நம்மேல் ஊற்றுகிறார். இரவிலும் நம்முடைய தீபம் அணையாமல் இருக்கட்டும்.
இரவிலே படுக்கப்போனாலும் அந்த அபிஷேகத்தினால் நிரம்பியவர்களாய் படுக்கச்செல்லுங்கள். ஒரு வேளை அந்த இரவே தேவனுடைய வருகை இருக்கக்கூடும் அல்லவா? இந்த நாள் என்னுடைய ஆத்தும நேசரைச் சந்திக்கிற நாளாய் இருக்குமோ, ஒரு வேளை இந்த வருட முடிவில் என் ஆண்டவருடைய பொன்முகத்தை நான் பார்ப்பேனோ என்று எண்ணி இரவும் பகலும் அபிஷேகத்தினால் நிரம்பிக்கொண்டேயிருங்கள்.
தீவட்டிக்குரிய எண்ணெய் ஒலிவ மரத்திலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் நம் வாழ்க்கையை எரிந்து பிரகாசிக்கச்செய்கிற எண்ணெய் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்துமட்டுமே நமக்குக் கிடைக்கிறது. தேவபிள்ளைகளே, ஆண்டவருக்காக பிரகாசிப்பீர்களா?
நினைவிற்கு:- “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்” (நீதி. 31:10,18).