No products in the cart.
செப்டம்பர் 10 – அக்கினியைப்போன்றது!
“இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன்” (எரே. 5:14).
வேதவசனம் அக்கினிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறதை இங்கே நாம் காணலாம். அக்கினிக்கு ஒரு தன்மை உண்டு. அது பற்றவைக்கக்கூடியது. அக்கினியை ஒரு காகிதத்தினருகில் கொண்டுவந்தால் அந்த காகிதம் பற்றி எரிகிறது. அன்று பேதுரு வசனத்தைப் பிரசங்கித்தார். அந்த வசனம் பரிசுத்த ஆவியைப் பற்ற வைத்தது.
வேதம் சொல்லுகிறது: “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்” (அப். 10:44-46).
வேத வசனத்தை பிரசங்கிக்கும்போது, ஜனங்கள்மேல் அக்கினி இறங்குகிறது. அதேநேரம், வேத வசனத்தை வாசித்து தியானிக்கும்போது, நமக்குள்ளே அக்கினி இறங்குகிறது. கல்வாரியின் அன்பு நேச அக்கினியாய்ப் பற்றி எரிகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையானது, அக்கினியாக நம்மை ஏவி எழுப்புகிறது. சங்கீதக்காரன், “என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” என்று குறிப்பிடுகிறார் (சங். 39:3).
அக்கினியினுடைய இன்னொரு குணாதிசயம், அது பூமியிலிருந்து வானத்தை நோக்கி எழும்புகிறது. மற்ற எல்லா பொருட்களையும் மேலே தூக்கிப்போட்டால் புவிஈர்ப்பு சக்தியினால் அவை கீழே இறங்குகின்றன. ஆனால் அக்கினிக்கும், புகைக்கும் மேல்நோக்கிச் செல்லும் சுபாவம் உண்டு. அப்படித்தான் நாம் வேதத்தை வாசிக்கும்போது நம் உள்ளத்திலிருந்து நேச அக்கினி கர்த்தரை நோக்கிச் செல்லுகிறது. துதியாக, ஸ்தோத்திரமாக பரலோகத்தின் சிங்காசனத்தை நோக்கி எழும்புகிறது. கர்த்தருடைய இருதயத்தை மனம் மகிழச்செய்கிறது.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வசனத்தை தியானிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு தெய்வீக அன்பு உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். அவ்வளவுக்கவ்வளவு ஆண்டவரை கிட்டிச்சேருவீர்கள். அவ்வளவுக்கவ்வளவு திடனுள்ளவர்களாய் விளங்குவீர்கள். வேத வசனம் அக்கினியைப்போன்றது என்பதை உணருவீர்கள்.
உன்னதப்பாட்டில் ஒரு அருமையான ஜெபத்தை நாம் காண்கிறோம். “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைக் தணிக்கமாட்டாது” (உன். 8:6,7).
தேவபிள்ளைகளே, உங்கள் உள்ளத்தில் இந்த அக்கினி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருக்கட்டும்.
நினைவிற்கு:- “தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்” (ஏசா. 64:2).