No products in the cart.
செப்டம்பர் 05 – அந்நிய பாஷையும், தேவபிரசன்னமும்!
அந்நிய பாஷையும், தேவபிரசன்னமும்!
“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” (யோவா. 4:24).
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள் கர்த்தரை ஆராதித்த பின்பு, ஆவியில் நிரம்பி அந்நிய பாஷைகளைப் பேச ஆரம்பிக்கும்போது, தேவனுடைய பிரசன்னம் மடை திறந்த வெள்ளம்போல அவர்களுக்குள் வருகிறது. ஆவியிலே களிகூருதல் உண்டாகிறது.
இயேசு கிறிஸ்துவும்கூட, பிதாவின் பிரசன்னத்தை அளவில்லாமல் உணர்ந்தபோது ஆவியிலே களிகூர்ந்தார் என்று லூக். 10:21-லே வாசிக்கிறோம். நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட நாளிலே கர்த்தரைப் பாடுவதும் துதிப்பதும் பெரிய ஆனந்த பாக்கிய அனுபவமாய் இருந்தது.
ஒரு முறை ஒரு ஆலய ஆராதனைக்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் “கர்த்தரின் கிருபை என்றுமுள்ளதே, அவர் கருணைக்கு எந்நாளும் குறையில்லையே” என்ற பாடலை மிகுந்த பயபக்தியோடே பாடிக்கொண்டிருந்தார்கள். பாடிக்கொண்டிருந்தபோதே அதிலுள்ள கருத்தை தியானிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என்மேல் வைத்த கிருபைகளையெல்லாம் எண்ணியபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் என்னையுமறியாமல் வடிந்தது.
நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடு அந்தப் பாடலை என்னையுமறியாமல் அந்நிய பாஷையில் பாடினேன். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்ற வார்த்தையின்படி, என் இருதயத்தை ஆவியானவர் நிரப்பியபோது என் வாய் அந்நிய பாஷைகளைப் பேசியது. அதன்பின் தேவனுடைய பிரசன்னம் மிக அதிகமாய் வெள்ளம்போல என்னை நிரப்பியது.
தாவீது இராஜாவும்கூட நடனம் ஆடும்போது, “என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்” (2 சாமு. 6:21) என்று சொன்னாரல்லவா?
ஆவியின் வரங்கள் ஒன்பதினைக் கர்த்தர் கொடுத்திருப்பதை வேதத்தில் பார்க்கிறோம். அதில் முதல் வரம் அந்நியபாஷை வரம்தான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களிலே நவமான பாஷைகளைப் பேசுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் தந்தருளும் வரத்தின்படியே அந்நியபாஷை பேசும்போது, தேவனுடைய அன்பின் ஆழங்களுக்குள் தெய்வீக பிரசன்னத்துக்குள் செல்லுகிறோம். அப்பொழுதுதான் ஆவிக்குள்ளாகும் மேன்மையான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.
கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். அப். பவுல், “நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்” (1 கொரி. 14:15) என்றார்.
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி” (சங். 45:1). தேவபிள்ளைகளே, நீங்கள் ஆவியினால் நிரப்பப்படும்போதெல்லாம் அந்நியபாஷை பேசி மகிழுங்கள். உங்களுக்குள்ளே தேவாதி தேவனுடைய ராஜ ஜெயகெம்பீரம் இருக்கிறது அல்லவா? (எண். 23:21).
நினைவிற்கு:- “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்” (ஏசா. 28:11,12).