No products in the cart.
செப்டம்பர் 04 – கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறா!
“கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே” (உன். 2:14).
புறாக்கள் தங்குவதற்கு என்று ஒரு பிரத்தியேகமான இடம் உண்டு. அது ஒருநாளும் மரங்களின்மீது தங்காது. தான் தங்குவதற்கென்று உன்னதமான ஒரு இடத்தைத் தெரிந்துவைத்திருக்கிறது. அதுதான் கன்மலையின் வெடிப்புகளும், சிகரங்களின் மறைவிடங்களும்.
“கன்மலையின் வெடிப்புகள்” என்பது உலகத்தைவிட்டு வேறுபட்டு ஜீவிக்கும் ஒரு உன்னதமான வாழ்க்கையைக் காண்பிக்கிறது. “அந்தக் கன்மலை கிறிஸ்துவே” (1 கொரி. 10:4). கிறிஸ்துவுக்குள் இருக்கிற ஒருவன் நிச்சயமாகவே உலகத்தாரைப்போல உலக ஆசை இச்சைகளிலும், மாம்ச சிந்தனைகளிலும் ஜீவிக்கமாட்டான். அவன் மேலானவைகளேயே நாடுவான். அவனுடைய நோக்கங்களும், சிந்தனைகளும் உயர்ந்ததாகவே இருக்கும்.
உலகத்தாருக்கு உன்னதமான நோக்கங்கள் இல்லை. பணம் சம்பாதிப்பதிலும், அநித்தியமான இந்த உலகத்தின் பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதிலுமே அவர்கள் வாஞ்சை கொள்ளுகிறார்கள். ஆனால், கர்த்தருடையவர்கள், உலகத்திற்குரியவர்கள் அல்ல. உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளுமாய் கடந்துபோகிறவர்கள். உலகத்தின் அதிபதி உங்களிடத்தில் வரும்போது அவனுக்கு உங்களிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் எப்பொழுதும் கன்மலையின் வெடிப்புகளிலும், சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிறவர்களாக இருப்பீர்களாக!
“சிகரங்களின் மறைவிடங்கள்” என்கிற பகுதியைப் பாருங்கள். அது ஒரு மறைவிடம். சாதாரணமாக யாரும் அதைப் பார்க்கமுடியாது. அங்கே தங்கியிருக்கிற புறா தன்னை மறைத்துக்கொள்ளுகிறது. பார்க்கிறவர்கள் புறாவையல்ல, உயர்ந்த சிகரங்களையே பார்க்கிறார்கள். இது நீங்கள் கிறிஸ்துவுக்குள் மறைந்து ஜீவிக்க வேண்டிய ஜெப வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.
நாம் எப்போதும் கன்மலையாகிய கிறிஸ்துவுக்குள் இருந்தால் மட்டுமே தேவமகிமையைக் காணமுடியும். அப்படிப்பட்ட வாழ்க்கையே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கவும் வேண்டும்; அவருக்குப் பிரியமானவகையில் ஜீவிக்கவும் வேண்டும்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய முப்பது வயதுவரையிலும் மறைந்தே ஜீவித்தார். கர்த்தருடைய வேளை வரும் வரையிலும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. அவர் ஊழியம் செய்தது மூன்றரை ஆண்டு காலங்கள். மறைந்திருந்ததோ முப்பது வருட காலங்கள். அந்த மூன்றரை ஆண்டு காலத்திலும்கூட அவர் தன்னை வெளிப்படுத்தாமல், பிதாவையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
நீங்கள் மறைந்திருக்கக்கூடிய முக்கியமான ஒரு இடம் கன்மலையின் வெடிப்புகள்தான். கன்மலை என்பது கிறிஸ்து என்றால், அந்த வெடிப்புகள் அவருடைய துளையிடப்பட்ட காயங்களையும், உருவக்குத்தப்பட்ட காயங்களையும், ஈட்டியால் பிளக்கப்பட்ட காயங்களையும், சிதைந்துபோன காயங்களையுமே காண்பிக்கின்றன. அதுவே நீங்கள் தங்கியிருக்கிற கன்மலையின் வெடிப்புகள் ஆகும்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் பாடுகளையும், காயங்களையும் தியானிக்கும்போது அவருடைய கல்வாரி நேசத்தால் கவரப்படுகிறீர்கள். அவருடைய பாதங்களே நீங்கள் தங்கியிருக்கிற மேன்மையான இடங்களாக மாறுகின்றன.
நினைவிற்கு:- “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1 கொரி. 2:2).