Appam, Appam - Tamil

செப்டம்பர் 02 – தங்கிவிட்ட புறா!

“அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது” (ஆதி. 8:9).

ஜலப்பிரளயத்தின்போது நோவா தனது பேழையிலிருந்து இரண்டு பறவைகளை வெளியேவிட்டார். ஒன்று காகம், மற்றது புறா. இரண்டு பறவைகளின் குணாதிசயமும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது, அவற்றின் சுபாவங்களும் வித்தியாசமானவை.

காகம் வெளியே போனபோது, அது பூமியின் மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போவதும் வருவதுமாய் இருந்தது. நியாயத்தீர்ப்பினால் உண்டான பயங்கர வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீது அமர்ந்து அழுகிய மாம்சத்தை அவை தின்றுகொண்டிருந்திருக்கவேண்டும். அது ஒரு அருவருக்கவேண்டிய பறவை (லேவி. 11:15). ஆனால் பேழையிலிருந்து புறப்பட்ட புறாவோ தன் உள்ளங்காலை வைத்து இளைப்பாற இடம் காணாமல், பேழைக்கே திரும்பி வந்தது.

பழைய ஏற்பாட்டின் நாட்களில், பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு இறங்கி வந்தார். ஆனால் உலகமானது பாவத்தினால் நிரம்பி இருந்ததினால், அவரால் ஜனங்களின் மத்தியில் தங்கியிருக்க முடியவில்லை. வெள்ளாட்டுக்கடா மற்றும் காளை போன்ற மிருகங்களின் இரத்தத்தினால் மனிதரைப் பூரணமாக பரிசுத்தமாக்கி, ஆவியானவர் வந்து தங்கியிருக்கும் அளவுக்கு அவர்களைப் பரிசுத்தத்தில் பூரணப்படுத்த முடியவில்லை. ஆகவே ஆவியானவர் மனுஷர்மேல் இறங்கி சில கிரியைகளைச் செய்தாலும், நிரந்தரமாய் அவர்கள் உள்ளத்தில் தங்கி இருக்கவில்லை. உள்ளங்கால் வைத்து இளைப்பாற அவருக்குத் தகுதியான இடம் கிடைக்கவில்லை.

காலங்கள் சென்றது. கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து ஆவியானவர் முன்னறிவிக்க ஆரம்பித்தார். தீர்க்கதரிசிகள் மூலமாய் வெளிப்படுத்த ஆரம்பித்தார். நோவாவின் பேழையிலிருந்து இரண்டாம்முறை புறப்பட்ட புறா, வாயிலே ஒலிவ இலையைக் கொத்திக்கொண்டு வந்ததுபோல, மேசியாவின் பிறப்பைக் குறித்த நற்செய்தியை இந்த பூமிக்கு ஆவியானவர் அருளிச் செய்தார். இன்றைக்கும் புறாவின் வாயிலிருக்கும் ஒலிவ இலையானது நற்செய்திக்கும், சமாதானத்திற்கும் அடையாளமாக உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நற்செய்தியைத்தான் தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள். ‘இதோ, எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்’ என்றார்கள். கிறிஸ்துவின் பிறப்புதான் பெரிய நற்செய்தி! அவருடைய சுவிசேஷத்தினால் பெரிய விடுதலையும், அவருடைய ஊழியத்தினால் என்றென்றைக்குமான ஆசீர்வாதங்களும், நற்செய்திக்குமேல் நற்செய்தியும் மனுக்குலத்திற்குக் கிடைத்தது.

புறா மூன்றாம்முறை அனுப்பப்பட்டபோது, அது பேழைக்குத் திரும்பிவரவில்லை. பூமியிலேயே தங்கிவிட்டது. அதுபோலவே, புதிய ஏற்பாட்டிலே புறாவாகிய பரிசுத்த ஆவியானவர், இயேசுவின்மேல் இறங்கி நிரந்தரமாய் அவரில் தங்கிவிட்டார். இயேசுவின்மேல் இருந்த ஆவியானவர்தான் பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்கள்மேல் ஊற்றப்பட்டார். இன்று கோடிக்கணக்கான விசுவாசிகளின் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கியுமிருக்கிறார். தேவபிள்ளைகளே, அந்த தேவ ஆவியானவர் உங்களில் தங்கியிருக்க இடம் கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- “….பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்” (அப். 10:44).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.