Appam, Appam - Tamil

செப்டம்பர் 01 – தேவதூதர்கள்!

“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10).

நம்முடைய குடும்பம் பெரியது. நம்முடைய கிறிஸ்தவக் குடும்பத்திலே பூமியெங்கும் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கிறார்கள்; பரலோகத்திலே ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் கர்த்தர் தனித்தனியே தேவதூதர்களைக் கொடுத்திருக்கிறார். நமக்குரிய குறிப்பிட்ட தேவதூதர்கள் பரலோகத்திலே பிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்.

ஒரு ஏழைக் கிறிஸ்தவனாயிருந்தாலும் சரி, சிறு வயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட குழந்தையாயிருந்தாலும் சரி, உலகத்தில் அற்பமாய் எண்ணப்பட்ட சிறியவனாயிருந்தாலும் சரி, அவர்களைக் கர்த்தர் மேன்மைப்படுத்துகிறார். அவர்களுக்காக தேவதூதர்களை நியமிக்கிறார்.

கர்த்தரிடத்திலுள்ள வல்லமையுள்ள தேவதூதர்களையெல்லாம் நியமிக்கப்பட்ட பணிவிடை ஆவிகளாகக் கொடுத்திருப்பது எத்தனை ஆச்சரியமானது! எனவேதான், அப். பவுல் “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறார் (எபி. 1:14).

அன்றைக்கு பிரதான ஆசாரியர்கள் பேதுருவுக்கு விரோதமாக எழும்பி பேதுருவை சிறைச்சாலையில் வைத்தபோது, தேவதூதனால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையினுடைய கதவுகளைக் திறந்து அவர்களை வெளியே கொண்டுவந்தான். ‘நீங்கள் போய் தேவாலயத்திலே நின்று இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்கு சொல்லுங்கள்’ என்றான். ஆம், நாம் கர்த்தருடைய பணியைச் செய்யும்போது தேவதூதர்களும் இறங்கி வந்து நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள்.

அதுபோலவே, அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையை வாசித்துப்பாருங்கள். அவர் கப்பலிலே ரோமாபுரிக்கு கொண்டுசெல்லப்பட்டபோது கடல் கொந்தளித்தது. புயல் வீசினது, ஜனங்கள் எல்லோரும் கலங்கித் தவித்தார்கள். அதைக் கண்ட பரலோகத்தால் பேசாமலிருக்க முடியவில்லை. அங்கேயிருந்து தேவதூதர்கள் வேகமாக இறங்கி வந்து அப். பவுலைத் தேற்றி திடப்படுத்தினார்கள்.

அப். பவுல் சொல்லுகிறார், “என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்” (அப். 27:23,24).

தேவதூதர்கள் கர்த்தருடைய செய்தியை எடுத்துச் சொல்லுகிறார்கள், நம்மைத் தேற்றுகிறார்கள், திடப்படுத்துகிறார்கள். நமக்கு பாதுகாவலாய் இறங்கிவருகிறார்கள். அநேகர் தூர தேசத்தில் இருக்கிற தங்கள் பிள்ளைகளைக்குறித்து பெரிதும் கவலைப்படுகிறார்கள். அதைப்போலவே, தாய்நாட்டிலிருக்கிற தங்கள் பெற்றோர்களைக்குறித்து பிள்ளைகள் எண்ணிக் கலங்குகிறார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் மனம்கலங்காமல் அவர்களைக்குறித்து பரலோகத்திலிருக்கிற கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் தம்முடைய தேவதூதர்களை அனுப்பி அவர்களைக் காத்துக்கொள்ள வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

நினைவிற்கு:- “நான் பார்த்தபோது, …. அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது” (வெளி. 5:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.