No products in the cart.
செப்டம்பர் 01 – தங்கும் புறா!
“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்” (மத். 3:16).
‘புறா’ என்பது பரிசுத்த ஆவியின் அடையாளங்களிலே ஒன்றாகும். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார். ஆவியானவர், “வான்புறா” என்று அழைக்கப்படுகிறார்.
பரலோகத்தில் அசைவாடிக்கொண்டிருந்த ஆவியானவர், இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது, புறாவைப்போல வேகமாக அவரின்மேலே இறங்கி வந்தார். இயேசு ஞானஸ்நானம் பெறுகிற வேளையானது, திரித்துவ தேவன் சந்தித்துக்கொள்ளுகிற வேளையாக இருந்தது.
மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது. யோவான் எழுதின சுவிசேஷத்தில் “ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன்” (யோவான் 1:32) என்று யோவான்ஸ்நானகன் சாட்சி கொடுக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தது மட்டுமல்ல, அவர் தங்கியும் இருந்தார். புதிய ஏற்பாட்டில், பரிசுத்த ஆவியானவரைக் குறித்து நமக்கு அறிவுறுத்தும் பாடம் என்னவென்றால் அவர் நம்மோடு தங்கியிருக்கிறவர் என்பதாகும். பழைய ஏற்பாட்டில் நாம் பார்ப்பதைப்போலல்லாமல் அவர் நிரந்தரமாய் நம்மோடு தங்கியிருக்கிறவர்.
இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைக் குறித்து சீஷர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16) என்று குறிப்பிட்டார். ஆவியானவர் உங்களுக்குள் வந்து தங்கியிருப்பது எத்தனை மேன்மையானது!
ஆவியானவர் உங்களுக்குள் வந்து தங்கியிருக்கும்போது, நீங்கள் அவரை எத்தனை அருமையாய் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்! ஒரு நாட்டின் பிரதம மந்திரி உங்களுடைய வீட்டில் வந்து தங்குகிறார் என்றால் அவரை கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ளுவதுடன் அவரைப் பிரியப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள் அல்லவா? பிரதம மந்திரியைப் பார்க்கிலும் மேன்மையான பரலோக விருந்தாளியாகிய வான்புறாவை நீங்கள் இன்னும் எவ்வளவு அதிக ஜாக்கிரதையோடும், அன்போடும் கவனித்துக்கொள்ளவேண்டும்!
உயிரினங்களிலேயே புறாவை மட்டும்தான் ‘கபடற்றது’ என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆடுகளை ஒநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத். 10:16) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவபிள்ளைகளே, உங்களுக்குள் வந்து வாசம்பண்ணும் வான்புறாவாகிய பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமுள்ளவர். பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறவர். உங்களோடுகூட ஒன்றரக் கலந்திருக்க விரும்புகிறவர். ஆவியானவருடைய ஒத்தாசையுடன் பரிசுத்தப்பட உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?
நினைவிற்கு:- “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19).