No products in the cart.
ஏப்ரல் 30 – ஸ்தோத்திரியுங்கள்!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” (எபே. 5:20,21).
நன்றியுள்ள இருதயம் உள்ளவர்கள் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிப்பார்கள். நன்றி இல்லாதவர்களோ எதற்கெடுத்தாலும் முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையிலே ‘ஸ்தோத்திரம்’ என்பது அருமையான மகிழ்ச்சியின் அனுபவமாகும்.
அநேகர் இந்த ஸ்தோத்திரத்தின் வல்லமையை புரிந்து கொள்ளாமல் ஸ்தோத்திரம் செய்யப் பழகாமல் இருக்கிறார்கள். இந்த வார்த்தையை அந்நிய சொல்லாக நினைக்கிறார்கள். இன்னும் அநேகர் ஸ்தோத்திரத்தைச் செய்யப் பழகாததினால் மற்றவர்களைக் கேலியும் பரியாசமும் செய்கிறார்கள். ‘ஸ்தோத்திரம்’ என்ற வார்த்தை தேவனோடு இணைக்கப்பட்ட ஒரு வார்த்தை ஆகும்.
ஸ்தோத்திரம் சொல்லும்போது கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். சிறுவயது முதல் இதுவரையிலும் ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்துப்பார்க்கும்போது நம்முடைய உள்ளம் நன்றியோடு ஸ்தோத்திரிக்கிறது. இதுவரை நன்மை செய்தவர் இனிமேலும் நன்மை செய்வார் என்ற விசுவாசத்தோடு அவரைத் துதிக்கும்படி நம்மை ஏவி எழுப்புகிறது.
ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான். ‘ஸ்தோத்திரம்’ என்று சொல்லுவது தேவனுடைய மகிமையான செயல்களையெல்லாம் எண்ணி தியானித்து அவரைத் துதிப்பதாகும்.
‘வானங்களை எவ்வளவு அழகாய் உண்டாக்கியிருக்கிறீர், உமக்கு ஸ்தோத்திரம், கடலை எவ்வளவு மகத்துவமாய் சிருஷ்டித்திருக்கிறீர், உமக்கு ஸ்தோத்திரம், மரங்களையும், பள்ளத்தாக்கையும் எனக்காக உண்டாக்கியிருக்கிறீர், உமக்கு ஸ்தோத்திரம்’ என்றெல்லாம் சொல்லி அவரை மகிமைப்படுத்துவதே ஸ்தோத்திரம் செய்வதாகும்.
பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ‘ஸ்தோத்திரம்’ என்ற வார்த்தை எண்பது தடவைக்குமேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இயேசு தம்முடைய சீஷர்களை இரண்டிரண்டு பேராக ஊழியத்திற்கு அனுப்பி அவர்கள் சந்தோஷத்துடன் திரும்பி வந்தபோது, பிதாவை நோக்கி, “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று சொல்லி ஸ்தோத்திரித்தார். (மத். 11:25).
திருவிருந்தின்போது, “பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” (மத். 26:27) என்றார், “அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி: நீங்கள் இதை வாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள்” (லூக். 22:17) என்றார். ஆம் சிலுவையின் அடிவாரம்மட்டும் அவர் ஸ்தோத்திரித்துக்கொண்டே இருந்தார்.
தேவபிள்ளைகளே, எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். ஸ்தோத்திரிக்க, ஸ்தோத்திரிக்க கிருபை உங்களில் பெருகிக்கொண்டேயிருப்பதை உணருவீர்கள். ஒரு உன்னத அனுபவத்தைப் பெற இதுவே வழி.
நினைவிற்கு:- “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).