No products in the cart.
ஏப்ரல் 30 – உங்கள் பொறுமையினால்!
“உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” (லூக். 21:19).
எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள் என்று சாலொமோன் ஞானி சொன்னார். “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்” என்று அப். பவுல் சொன்னார் (2 தீமோத். 1:14). “தீமோத்தேயுவே, உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள் (1 தீமோத். 5:22).
“தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்று திருவள்ளுவர் குறள் இயற்றினார். முதலாவது, தன்னையும், தன் கற்பையும் காத்துக்கொள்ளவேண்டும். தன் வாயின் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளவேண்டும். சோர்வடையாமல் தன் சரீரத்தைப் பேணிக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதே திருவள்ளுவர் கொடுக்கிற ஆலோசனை.
உலகத்தார், பலவிதமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். “நகை அணிந்துகொண்டு, இரவிலே போகாதே.” “உனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. மேலதிகாரியிடம் கோபப்பட்டு உன் வேலையை இழந்துவிடாதே. கஷ்டப்பட்டு கிடைத்த வேலையை காப்பாற்றிக் கொள்.” “குடும்ப ஐக்கியத்தைக் காத்துக்கொள். ஒருமனப்பாட்டைக் பாதுகாத்துக்கொள். பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொள்” என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.
இன்னொரு திருக்குறள் சொல்லுகிறது, “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.” எதைக் காக்காமற்போனாலும் பரவாயில்லை. உன் நாவைக் காத்துக்கொள் என்பதே அதன் விளக்கம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லா வகைக் காவலோடும் உன் ஆத்துமாவைக் காத்துக்கொள் என்றே வேதம் நமக்கு எச்சரிக்கிறது. ஆத்துமாவைப் பாதுகாக்க முதலாவது, இயேசுவின் இரத்தத்தாலே அது பாவங்களறக் கழுவப்படவேண்டும். “ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி. 17:11).
இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பில்லை. ஆத்துமாக்களை பாவ பிடியிலிருந்து மீட்கவே, இயேசு கல்வாரிச் சிலுவையில் பாவ நிவாரண பலியானார்.
ஆத்துமாவில் அறிவுவேண்டும் (நீதி. 19:2). மூளையின் அறிவு இறுமாப்பை உண்டாக்கும். ஆத்துமாவின் அறிவோ, வேதம் சொல்லுவதைக் கேட்கச்செய்யும். “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக். 18:20). “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்” (நீதி. 6:32).
உங்களுடைய நடை, உடை, செயல்களெல்லாம் கர்த்தரையே பிரியப்படுத்துபவையாய் இருக்கட்டும். இரத்தத்தால் மீட்கப்பட்ட உங்கள் ஆத்துமாவை பரிசுத்தத்தோடு பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களும் பாவம் செய்யாதிருங்கள். மற்றவர்களையும் பாவம் செய்யத் தூண்டும்படி நடந்து கொள்ளாதிருங்கள். உணவு, உடையைவிட உங்கள் ஆத்துமா முக்கியமானது.
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்வீர்களானால், உங்களுடைய நித்தியத்தை காத்துக்கொள்ளுவீர்கள். உங்கள் ஆத்துமாவில் பரிசுத்தமிருக்குமென்றால், நீங்கள் மகிமையின் தேசமாகிய பரலோக இராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் சேருவீர்கள்.
நினைவிற்கு:- “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:29).