Appam, Appam - Tamil

ஏப்ரல் 21 – ஆராதியுங்கள்!

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (1 நாளா.16:29).

கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; கர்த்தர் உங்களை சிருஷ்டித்ததே அவரை தொழுதுகொள்ளுகிறதற்காகத்தான். உங்கள்மேல் அவர் ஒரு விசேஷித்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா.43:21) என்பதே அந்த எதிர்பார்ப்பாகும். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் கர்த்தர் தமக்கென்று பரிசுத்த ஜனமாக உங்களைத் தெரிந்துகொண்டார். நீங்கள் இந்த உலகத்திலும் அவரைத் துதிப்பீர்கள். நித்தியத்திலும் அவரைத் துதிப்பீர்கள்.

முதலாவதாக, நீங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது, அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். ஆராதிக்கவேண்டும். அவருடைய கிருபைகளையெல்லாம் எண்ணி அவரைப் போற்ற வேண்டும். கர்த்தர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லாம் எண்ணி அவரைத் துதிக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, “அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துக் கொள்” (சங்.45:11).

இரண்டாவதாக, கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது ஜெபிக்கிறது மாத்திரமல்ல, உங்களுடைய விசுவாசத்தையும் அறிக்கை செய்யவேண்டும். “ஆண்டவரே, நீர் உலகங்களையெல்லாம் சிருஷ்டித்தவர். கல்வாரிச் சிலுவையிலே எனக்காக ஜீவனைக் கொடுத்தவர். நீர் மீண்டும் இந்தப் பூமியில் வருவீர் என்று விசுவாசிக்கிறேன்” என்றெல்லாம் உங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்வீர்களாக.

ஒருமுறை கிறிஸ்து ஒரு பிறவிக் குருடனைக்கண்டு, மனம் இரங்கி, அவனுடைய கண்களில் சேற்றைப் பூசி சொஸ்தமாக்கினார். அவன் கண்கள் திறக்கப்பட்டபோது சந்தோஷமாய் திரும்பிப் போனான். இயேசு மீண்டும் அவனைச் சந்தித்தபோது, ‘நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அவன் ‘ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்’ என்று சொல்லி அவரைப் பணிந்துகொண்டான் (யோவான் 9:38).

மூன்றாவதாக, நீங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது அவரை ஸ்தோத்திரிக்கிறவர்களாக இருக்கவேண்டும். தாவீது தன்னுடைய குழந்தை இறந்த நிலையில் தேவனுடைய ஆலயத்திற்குச் சென்று, “அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை” (2சாமு. 12:23) என்று சொல்லி தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். ஆம், கர்த்தருடைய ஆலயமே அவருக்கு ஆறுதலின் இடமாக இருந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதங்களே உங்களுக்கு ஆறுதலின் பாத்திரமாக இருக்கட்டும். பிரச்சனைகள் வரும்போது கர்த்தருடைய ஆலயத்திற்குபோய் உங்களது பாரங்களை கர்த்தரிடம் பகிர்ந்து கொள்ளுவீர்களாக. அப்போது அவர் உங்களுக்கு ஆசீர்வாதங்களையும், ஆறுதலையும் கட்டளையிடுவார்.

நினைவிற்கு:- “ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது” (ஏசா.6:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.