Appam, Appam - Tamil

ஏப்ரல் 19 – ஜெபம்பண்ணுவதில்!

“நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” (அப். 6:4).

ஜெபம் மிக மிக முக்கியமானது. ஜெபம்பண்ணுகிற நேரத்தை வேறு எந்த வேலைக்கும் செலவிட்டு, ஈவாகத் தரப்பட்ட பொன்னான தருணத்தை வீணாக்கிவிடாதிருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஜெபிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய ஆத்துமாவைப் பரிசுத்தமாய் பாதுகாத்துக்கொள்ளுவீர்கள். சாத்தானுடைய வல்லமையை முறியடிப்பீர்கள். ஜெயங்கொண்டவர்களாய் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். ஜெபம்மட்டுமே சாத்தானிடமிருந்து நம்மைக் காக்கும் வல்லமைகொண்டது.

ஆதித் திருச்சபையின் நாட்களிலே சீஷர்கள் பெருகினபோது, பல பிரச்சனைகள் எழுந்தன. கிரேக்கரானவர்கள் தங்கள் விதவைகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்று முறுமுறுத்தார்கள். அனனியாவும், சப்பீராளும், தங்கள் காணியாட்சியை விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்துவைத்தார்கள்.

மறுபக்கத்தில் யூதர்கள்மூலமாகவும், ரோம அரசாங்கத்தின்மூலமாகவும் கிறிஸ்தவர்களுக்கு பயங்கரமான உபத்திரவம் நேரிட்டது. அப்பொழுது பேதுரு தன் கவனத்தை அங்கும் இங்கும் சிதறடிக்காமல் தீர்மானமாய் சொன்னார், “நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” (அப். 6:4).

ஆம், தங்கள் ஊழியத்திற்கு ஜெபம் அத்தியாவசியம் என்பதை அப்போஸ்தலர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். நீங்களும் ஜெபத்தின் மதிப்பையும், வல்லமையையும் உணர்ந்துகொள்ளுங்கள். முழங்கால்படியிட்டு ஜெபிக்கும் நேரமானது, கர்த்தருக்கென்று அரிய பெரிய காரியங்களைச் செயல்படுத்த ஏவி எழுப்பும் வல்லமையின் ஒரு நேரம். ஜெபத்தின் வழிதான் ஜெயத்தின் வழி.

“பாவத்திற்கேயன்றி வேறொன்றுக்கும் அஞ்சாதவர்களாகவும், ஜெபவீரர்களாகவும் உள்ள நூறு பிரசங்கிமாரை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். அப்படிப்பட்டவர்களால்மட்டுமே பாதாள வாசல்களை அசைக்கமுடியும். அவர்களால்மட்டுமே பரலோக இராஜ்யத்தை இப்பூமியில் நிலைநிறுத்தமுடியும். தேவன் தம் பிள்ளைகளின் ஜெபங்களுக்கு பதிலளிப்பாரேயன்றி, தாமாக வேறு எதுவும் செய்யமாட்டார்” என்று முழங்கினார் ஜான் வெஸ்லி.

உங்கள் ஜெபத்தைத் தடுப்பதற்கு பல மனச்சோர்வுகளை சாத்தான் கொண்டுவரக்கூடும். ‘என் கணவனே என்னைப் புரிந்துகொள்ளாமல் என்னைக் கடினமாய் பேசிவிட்டாரே. இனி நான் என்ன சொல்லி ஜெபிப்பது’ என்ற நம்பிக்கையற்ற உணர்வுகள் சோர்வை கொண்டுவந்துவிடக்கூடும். ‘ஐயோ, என் மனைவியே என்னை நம்பவில்லை, என் மீது சந்தேகப்படுகிறாளே. திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் மனதில் உற்சாகமில்லையே. நான் ஜெபித்து என்ன பிரயோஜனம்?’ என்று அதைரியமடைந்து பேசுவாருமுண்டு.

ஜெபிக்க முடியாதபடி இருள் உள்ளத்தை சூழ்ந்தாலும் இயேசு, இயேசு என்று கர்த்தருடைய உன்னத பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டேயிருங்கள். அது ஒன்றுதான் தேவ பிரசன்னத்தை உங்களுக்குள் கொண்டுவரமுடியும்.

தேவபிள்ளைகளே, ஜெபிக்க முடியாத காரிருள் சூழ்ந்துகொண்டிருக்கும்போது, கடினமாக ஜெபிக்க ஒப்புக்கொடுத்துவிடுங்கள். சோர்ந்துபோகாமல் ஜெபம்பண்ணுங்கள். கர்த்தர் ஒரு அற்புதத்தைச் செய்வார்.

நினைவிற்கு:- “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசா. 40:29,31).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.