No products in the cart.
ஏப்ரல் 15 – நம் பட்சத்தில்!
“தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31).
ரோமர் 8-ம் அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் என்று சவாலிட்டுக் கேட்கிறார்.
கர்த்தருடைய சவாலை யாராலும் எதிர்த்து நிற்க முடியாது. எந்தச் சத்துருவாலும் எதிர்த்து நிற்கமுடியாது. தேவனுடைய பிள்ளைகளின்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவானே தவிர, ஒரு நாளும் அவன் நிலைநிற்பதில்லை.
“கர்த்தர் நம் பட்சத்திலிருந்தால்” என்று பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார். முதலாவது, கர்த்தர் நம்முடைய பட்சத்தில் இருக்கிறாரா என்பதை நம்மை நாமே ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும். பாவங்கள் அவரை நமக்குத் தூரமாக்கியிருக்கக்கூடாது. நம்முடைய அருவருப்பான வாழ்க்கையினிநிமித்தம், அவர் விலகிப்போயிருக்கக்கூடாது.
அன்றைக்கு சிம்சோன், தேவன் தன்னுடைய பட்சத்தில் இருக்கிறாரா என்று ஆராய்ந்து பார்க்கவில்லை. கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். சிம்சோனுக்கு ஏற்பட்ட முடிவை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆகவே, எப்போதும் கர்த்தர் நம்முடைய பட்சத்தில் இருக்கிறாரா என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். அப்படி இருக்கிறார் என்று உணரும்போது, நம் உள்ளம் தைரியமடையும். சிங்கத்தைப்போல உறுதியுள்ளவர்களாய் நிற்போம்.
கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்ட தாவீது சொல்லுகிறார், “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? …. என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (சங். 118:6,7).
தேவன் உங்கள் பட்சத்திலே இருப்பாரென்றால், வேதம் சொல்லுகிறது, “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்” (ஏசா. 54:17). “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரே. 1:19).
நம்முடைய பட்சத்தில் இருக்கிற தேவன் பெரியவர். கோடிக்கணக்கான சத்துருக்கள் ஒன்றாய் கூடினாலும், அவர்களைப்பார்க்கிலும் நம்முடைய தேவன் பெரியவர். வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் அனைத்தும் எதிர்த்துவந்தாலும், அவைகளைப் பார்க்கிலும் நம்முடைய தேவன் பெரியவர். வேதம் சொல்லுகிறது, “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவா. 4:4).
அன்று, இஸ்ரவேலரின் கண்களிலே கோலியாத் பெரியவனாய் காணப்பட்டான். சவுலின் பார்வையிலே, கோலியாத் பெரிய யுத்த வீரன்தான். ராட்சத பிறவிதான். எல்லாரும் தங்களையும், கோலியாத்தையும் ஒப்பிட்டு, தங்களைவிட கோலியாத்தை பெரியவனாக எண்ணினார்கள்.
ஆனால் தாவீதோ, தேவனை முன்வைத்ததன்மூலம் கோலியாத்தை சிறியவனாகக் கண்டார். தேவன் எனது பட்சத்தில் இருக்கும்போது எனக்கு விரோதமாய் நிற்பவன் யார் என்று முழங்கினார். கோலியாத்தை வீழ்த்தி ஜெயம் பெற்றார்.
நினைவிற்கு:- “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (சங். 118:5).