No products in the cart.
ஏப்ரல் 14 – விசேஷித்த ஐசுவரியசம்பன்னர்!
“யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (ரோம. 10:12).
நம்முடைய பிதா ஐசுவரியசம்பன்னர், நாம் அவருடைய விசேஷமான பிள்ளைகள். அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றவர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார் (ரோம. 8:15,16).
நீங்கள் விசேஷமானவர்கள். இராஜாதி இராஜாவின் பிள்ளைகள், கர்த்தாதி கர்த்தருடைய சுதந்தரவாளிகள். ஆகவே, நீங்கள் ஒருநாளும் தலைகுனிந்து வெட்கத்தோடே நடக்கவேண்டிய அவசியமில்லை. யாரும் உங்களைத் தாழ்த்தவோ, அற்பமாய் எண்ணவோ இடங்கொடாதிருங்கள்.
நீங்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளானபடியால் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கங்கள், இலட்சியங்கள், தரிசனங்கள் ஆகியவை எப்பொழுதும் உயர்ந்தவைகளாகவே இருக்கட்டும். நீங்கள் கர்த்தருடைய சித்தத்திலிருந்து அவருடைய உயரிய நோக்கத்திலிருந்து உண்டானவர்கள். உங்களைக்குறித்து மேன்மையான திட்டங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார்.
ஆம், நிச்சயமாகவே மகிமையான எதிர்காலம் உங்களுக்கு உண்டு. உங்களை ஏளனம்பண்ணி, அற்பமாய் நினைத்து, கேவலப்படுத்துபவர்களை விட்டு விலகுங்கள். உண்மையிலேயே சிறந்த மேன்மையான மக்கள் எப்பொழுதும் மற்றவர்களையும் மேன்மையாகவே எண்ணுவார்கள். கர்த்தர் உங்களை மேன்மையாய் எண்ணியிருக்கிறார். அவர் சிருஷ்டிப்பிலே நீங்கள் மேன்மையானவர்கள்.
ஒரு பக்தன், ‘கர்த்தர் எந்த மனுஷனையும் வீணாகவோ அற்பமாகவோ சிருஷ்டிப்பதில்லை. வேண்டாததை உருவாக்கும்படி அவர் தன்னுடைய நேரத்தையும் சமயத்தையும் வீணாய் செலவழிப்பதில்லை’ என்று சொன்னார். கர்த்தர் உங்களை விசேஷமுள்ளவர்களாய் எண்ணுகிறபடியால் ஒருபோதும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம்கொடாதிருங்கள்.
நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் மேன்மையான, உன்னதமான நிலைமைக்கு வரவேண்டுமானால் அதற்கு ஐந்து படிகள் உண்டு. முதலாவது, நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் சுதந்தரவாளிகள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இரண்டாவதாக, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆளுமைகளைப் பயன்படுத்துங்கள்.
மூன்றாவதாக, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற வல்லமையை செயல்பாட்டில் கொண்டுவாருங்கள். நான்காவதாக, கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்கு இருக்கும் உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் ஐசுவரியங்களையும் எண்ணிப்பாருங்கள். ஐந்தாவதாக, நீங்கள் சென்றடையப்போகிற பரலோக இராஜ்யத்தை எண்ணிக் களிகூருங்கள்.
தேவபிள்ளைகளே, ஒன்றுமில்லாமல் இருந்த உங்களைத் தமது பிள்ளைகளாக்கி, உங்களுக்கு ஆளுமையும் அதிகாரத்தையும் கொடுத்து, தமது வல்லமையினால் நிரப்பி, உன்னதத்தின் சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை நிரப்பி, நித்திய இராஜ்யத்தை உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிற ஐசுவரியசம்பன்னராகிய கர்த்தரை நன்றியோடு துதிப்பீர்களா?
நினைவிற்கு:- “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).
