Appam, Appam - Tamil

ஏப்ரல் 12 – துதியும், மகிமையும்!

“மோசே வேலையை முடித்தான். அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது. கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (யாத். 40:33,34).

கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளை செய்து முடித்தார். அப்பொழுது தேவனுடைய மகிமையின் மேகம், ஆசரிப்புக் கூடாரத்தை நிரப்பினது. அந்த மகிமையின் பிரசன்னம் காரணமாக, மோசேயினால்கூட ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை.

மரிக்கும் முன்பதாக மோசே நேபோ மலையிலுள்ள பிஸ்கா கொடுமுடியிலிருந்து கீழே உள்ள கானான் தேசம் முழுவதையும் பார்த்தார். பின்பு அவர் கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தார். மோசே மரிக்கிறபோது நூற்றியிருபது வயதாய் இருந்தார். அவர் கண்கள் இருளடையவும் இல்லை. அவருடைய பெலன் குறையவுமில்லை (உபா. 34:1,5-7).

சாலொமோன் கர்த்தருக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டிமுடித்து பிரதிஷ்டை பண்ணி, ஆசாரியர்கள் நூற்றியிருபதுபேர் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, கர்த்தரைத் துதித்தபோது, தேவனுடைய மகிமையும், தேவபிரசன்னமும் அந்த ஆலயத்தை நிரப்பிற்று. ஏக சத்தமாய்க் கர்த்தரைத் துதித்து, ஸ்தோத்தரித்துப் பாடினார்கள். அவர்கள் ஸ்தோத்தரிக்கையிலே, கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது (2 நாளா. 5:13).

ஒரு பரிசுத்தவான் இந்தியாவிலும், வெளிதேசத்திலும் மிகவும் தியாகமாக ஆண்டவருக்கு ஊழியம் செய்தார். மரிக்கிற வேளை வந்தபோது, அவர் படுக்கையிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தார். நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்க விரும்புகிறேன் என்று சொன்னார். அவர் மிகவும் வயது முதிர்ந்து, பெலவீனமாய் இருந்தபடியால் தரையில் பாய் விரித்து தலையணைகளை வைத்தார்கள்.

இரு பக்கத்திலும் ஒவ்வொருவர் நின்றுகொண்டு அவரை முழங்கால்படியிடச்செய்து, கைகளை உயர்த்தினார்கள். தம் கரங்களை பரலோகத்திற்கு நேராய் உயர்த்தி, முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் துதிக்கத்துதிக்க, அவருடைய முகத்திலே ஒளி பிரகாசித்தது. தேவனுடைய மகிமை அவரில் இறங்கினது. சமாதானத்தோடு கர்த்தரைத் துதித்த வண்ணமாகவே அவர் நித்தியத்துக்குள் கடந்து சென்றார்.

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறது. இந்த உலகத்தின் ஓட்டத்தை நீங்கள் ஓடி முடிக்கும்போது, ஆசரிப்புக் கூடாரத்தை மூடிய மகிமை, சாலொமோனுடைய ஆலயத்தை நிரப்பிய மகிமை, உங்களையும் நிரப்ப வேண்டும். உங்களுடைய முடிவு சம்பூரணமானதாகவும் நிறைவுற்றதாகவும் இருக்க வேண்டும்.

தேவபிள்ளைகளே, உங்கள் முடிவு நேரத்தில் உங்களைச்சூழ தேவ ஊழியர்களும், விசுவாசிகளும் கர்த்தரைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்கும்நிலையில் நீங்கள் தேவ மகிமைக்குள் பிரவேசிப்பது உங்களுக்கு எத்தனை பாக்கியமான அனுபவமாயிருக்கும்! இதனிலும் மேலான ஒரு முடிவு இருக்கவும் கூடுமோ?

நினைவிற்கு:- “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்” (2 நாளா. 6:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.