No products in the cart.
ஏப்ரல் 11 – ராஜஸ்திரீயின் வெகுமதி!
“தர்ஷீசின் ராஜாக்களும், தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்” (சங். 72:10).
தென்தேசத்து ராஜஸ்திரீயாகிய சேபா, சாலொமோனுடைய ஞானத்தைக்குறித்து கேள்விப்பட்டு, அதன் உண்மைத்தன்மையை அறியும்படி, நேரிடையாக இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தாள். அவள் ராஜாவாகிய சாலொமோனுக்கு, நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்.
அந்த வெகுமதிகள் சாலொமோனின் இருதயத்தை மகிழ்வித்தது. அவளது அத்தனை கேள்விகளுக்கும் சாலொமோன் ஞானமாக விடைகளைக் கொடுத்தார். அவளுடைய உள்ளம் ஆச்சரியப்பட்டது.
இயேசு அதைக்குறித்து, “தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்” என்றார் (மத். 12:42).
சாலொமோனுடைய ஞானத்தைப்பார்க்கிலும், இயேசுகிறிஸ்துவினுடைய ஞானம் எத்தனையோ கோடிமடங்கு அதிகமானது! சாலொமோனுக்கு கொடுக்கப்பட்ட ஞானம், உலக ஞானம். ஆனால், இயேசுகிறிஸ்துவின்மூலமாக ஆவிக்குரிய ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். ஞானம் என்றால் என்ன? ஒருவர் தான் பெற்றுக்கொண்ட அறிவைத் திறமையாக, சாமர்த்தியமாக செயல்படுத்துவதுதான் ஞானம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். கற்றதைச் செயல்படுத்துகிற மாணவர்கள் ஞானத்தை உடையவர்களாயிருக்கவேண்டும்.
ஆவிக்குரிய ஞானம் என்பது எது? “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி. 1:7). அந்த ஞானத்தினால் கர்த்தரை பிரியப்படுத்துகிறோம். அந்த ஞானத்தினால் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறோம். அந்த ஞானத்தினால் பரலோகத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறது, “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது” (ரோம. 11:33).
இந்த உலகத்திலிருந்தபோது, இயேசுவுடைய ஞானத்தைக்கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சிறு வயதிலேயே இந்த ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது என்று வியந்தார்கள். அவர் முப்பது வயதிலே ஞானஸ்நானம் பெற்றபோது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கி தங்கியிருந்தார் (மத். 3:16). அவரே இயேசுவுக்கு ஞானத்தின் வெளிப்பாடுகளைக் கொடுத்தார்.
இதைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்” என்று உரைத்தார் (ஏசா. 11:2).
தேவபிள்ளைகளே, கர்த்தரிடத்தில் ஞானத்தைக் கேளுங்கள். அவர் நிச்சயமாய் அதை உங்களுக்குத் தந்தருளுவார். வேதம் சொல்லுகிறது, “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக். 1:5).
நினைவிற்கு:- “எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்” (1 கொரி. 1:24).