No products in the cart.
ஏப்ரல் 05 – பயப்படாதிருங்கள்!
“இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள் …. என்றார்” (மத். 28:10).
அன்பு அன்றன்றுள்ள அப்பம் குடும்பத்தினருக்கு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ளுகிறேன்.
இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த நாட்களில் அநேக பிரசங்கங்களைச் செய்தார். அநேக ஆறுதலின் வார்த்தைகளைக் கூறினார். பல முறை சீஷர்களையும், விசுவாசிகளையும் பார்த்து, ‘பயப்படாதிருங்கள்’ என்று இயேசுவானவர் சொல்லியிருந்தாலும், தாம் உயிர்த்தெழுந்த பிறகு தம்முடைய சீஷர்களைப் பார்த்துச் சொன்ன ‘பயப்படாதிருங்கள்’ என்னும் வார்த்தைக்கு விசேஷ வல்லமையும் ஆறுதலும் உண்டு.
உயிர்த்தெழுந்த இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவர் ஒருவரே மரணத்தை ஜெயித்து, பாதாளத்தை மேற்கொண்டவர். அவர் ஒருவரே சத்துருவின் தலையை நசுக்கினவர். அவர் ‘பயப்படாதிருங்கள்’ என்று சொல்லும்போது மரணத்திற்கும், பாதாளத்திற்கும், சாத்தானுக்கும் நாம் பயப்படவேண்டிய அவசியமேயில்லை.
உலக தலைவர்களோ, அதிகாரிகளோ ‘பயப்படாதிருங்கள்’ என்று சொல்லும்போது அந்த வார்த்தையின் பயன் மிகவும் குறைவுதான். அவர்கள் உலக பயத்திலிருந்து மாத்திரம்தான் சிறிதளவு விடுவிக்கமுடியும். ஆனால் சாத்தானிடமிருந்தோ, பாதாளத்திடமிருந்தோ, மரண வல்லமையிலிருந்தோ மனுஷனை அவர்களால் தப்புவிக்கமுடியாது.
‘பயப்படாதிருங்கள்’ என்று சொல்லுகிற உயிர்த்தெழுந்த இரட்சகரை நோக்கிப்பாருங்கள். அவர் ஒரு வீரனைப்போலவும், தளபதியைப்போலவும் காணப்படுகிறார். இராஜாதி இராஜாவாகவும், வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உடையவராகவும் நின்று ‘பயப்படாதிருங்கள்’ என்று சொல்லுகிறார். ஆம், மிகப்பெரிய அதிகாரத்திலுள்ள வல்லமையுள்ளவரால்தான் ‘பயப்படாதிருங்கள்’ என்று சொல்லி மனுக்குலத்தைத் தேற்றமுடியும்.
எந்த ஒரு மனுஷன் தேவனுடைய பிரசன்னத்தை உணரவில்லையோ அவனே பயப்படுகிறான். எந்த ஒரு மனுஷன் சூழ்நிலையை தெய்வ வல்லமையோடு சந்திக்கமுடியாமல் இருக்கிறானோ அவனே பயப்படுகிறான். சீஷர்கள் அப்படித்தான் பயந்தார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டு, மரித்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிட்டார்கள். தாங்கள் பின்பற்றுகிற இரட்சகர் யார் என்பதை அறிந்துகொள்ள முடியாததினால் அவர்கள் கலங்கித் தவித்தார்கள். ஆனால், இயேசுவோ அவர்கள் அருகிலே வந்து, உயிர்த்தெழுந்தவராய் நின்று ‘பயப்படாதிருங்கள்’ என்று தேற்றினார்.
முன்பு இயேசு சரீரத்தில் இருந்தார். சரீரத்தில் வாழ்ந்த இயேசுவால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்கமுடிந்தது. ஆனால் இப்பொழுதோ அவர் உயிர்த்தெழுந்தபடியினால் ஆவியாக பல இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கமுடிகிறது. ஒரே நேரத்தில் உலகத்திலுள்ள அனைவரையும் தேற்றமுடிகிறது. பகலோ, இரவோ எல்லா நேரத்திலும் நம்மை ஆறுதல்படுத்தமுடிகிறது. தேவபிள்ளைகளே, உயிரோடு எழுந்த கர்த்தர் உங்களோடிருக்கிறபடியினாலே பயமின்றி, மகிழ்ச்சியுடன் இருப்பீர்களாக.
நினைவிற்கு:- “பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி. 1:17,18).
