No products in the cart.
ஏப்ரல் 03 – முட்களின் மத்தியில் ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
ரோஜா மலரானது எப்பொழுதும் முட்களின் நடுவே காணப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது இந்த ரோஜாப்பூவின் இதழ்கள் முட்களால் குத்தப்படுகின்றன. அதற்கு நன்றி சொல்லும் அடையாளமாக ரோஜா சுகந்த வாசனையை வீசுகிறது.
அதுபோலவே சாரோனின் ரோஜாவாகிய இயேசு கிறிஸ்து பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் என்னும் முட்களின் நடுவே வாசம்செய்தார். அவர்கள் அவரை குறைகூறி, குற்றம் கண்டுபிடித்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க வழிதேடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள்மத்தியிலே அவர் குற்றமற்றவராகவும், வாசனை பரிமளிக்கிறவராகவும் விளங்கினார்.
இயேசுகிறிஸ்துவுக்கே முள்ளும் உபத்திரவமும் இருந்திருக்குமானால், உங்களுடைய வாழ்க்கையிலும் முட்கள் குத்தத்தானேசெய்யும். இயேசு இன்று உங்களை திடப்படுத்திச் சொல்லுகிறார்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33).
முட்களிலும்கூட காணக்கூடிய முட்கள் மற்றும் காண முடியாத முட்கள் என இருவகை உண்டு. காணக்கூடிய முட்கள் எவை? தலையிலே கொடூரமான முள்முடி, கையிலே பயங்கரமான ஆணி, கால்களிலே துளையிட்ட ஆணி, விலாவிலே ஈட்டி குத்து, சரீரமெல்லாம் சவுக்கடி ஆகியவையே. காண முடியாத முட்கள் எவை? நிந்தை, அவமானம், கேலி, பரிகாசம் ஆகியவையே அவை. சிலுவைப்பாதையிலும் கொல்கதாமேட்டிலும் அவர் இருதயத்தை எத்தனை நிந்தையின் முட்கள் குத்தின!
இயேசுகிறிஸ்து தமக்கு சொந்தமானதிலே வந்தார், சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சீஷன் மறுதலித்தான், அடுத்தவன் காட்டிக்கொடுத்தான், மற்ற சீஷர்களோ அவரை கைவிட்டுவிட்டு சிதறுண்டு ஓடிவிட்டார்கள். தனிமையாகிய முள் அவரைக் குத்தியது. “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறினார். எத்தனை வேதனையின் தொனி!
ஒரு வாலிபனிடம் அவன் விரும்பிய பெண் தனக்கு ஒரு சிவந்த ரோஜா வேண்டும் என்று விரும்பிக்கேட்டாள். அது ஒரு பனிக்காலமாய் இருந்தபடியால் அவன் தேடியலைந்தும் அவனால் மலர்களைக் காணமுடியவில்லை. அவனது வேதனையை அறிந்த ஒரு நைட்டிங்கேல் பறவை, அவனுக்காக வெகுநேரம் பறந்து சிவந்த ரோஜாவைத் தேடியது. முடிவாக ஒரே ஒரு வெண்மையான ரோஜாமொட்டை ஒரு செடியில் கண்டது. அதைச் சிவப்பாக்க, அது மலர்கிற நேரத்தில் அதற்கு மேலேயிருந்த ஒரு பெரிய முள்ளிலே தன்னுடைய நெஞ்சை அழுத்தியப்படி ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தது. இருதயத்தில் குத்திய அந்த முள்ளினால் இரத்தம் பீறிட்டு வந்து, அந்த வெள்ளை ரோஜாவை சிவப்பாக்கிற்று. பறவை செத்து மடிந்தது. ஆனால் சிவந்த ரோஜாவைப் பெற்றுக்கொண்ட அந்த வாலிபனோ அந்த தியாகத்தின் மேன்மையை அறிந்துகொள்ளவில்லை.
தேவபிள்ளைகளே, உங்களுக்காக சிலுவையிலே சிவந்த ரோஜாவாக மலர்ந்த அவர், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று மன்றாடியதை தியானித்து, நாமும் மன்னிக்கும் சிந்தைக்கு நம்மை அர்ப்பணிப்போம்.
நினைவிற்கு:- “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது” (யோவா. 19:34).
