No products in the cart.
ஏப்ரல் 02 – விரும்புகிறதைக் கேள்!
“நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” (1 இரா. 3:5).
நம்முடைய விருப்பங்களை நமக்குள்ளே அடக்கி வைத்துக்கொண்டிருக்காமல், அதை ஜெபத்தினாலும் ஸ்தோத்திரத்தினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்தவேண்டியது நம்முடைய கடமை. ஒரு நாள் கர்த்தர் “கிபியோனிலே சாலொமோனுக்கு தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்றார் (1 இரா. 3:5).
இன்றைக்கும் நம் ஒவ்வொருவரையும் கர்த்தர் அன்போடு அரவணைத்து ‘என் மகனே, மகளே, நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்’ என்று சொல்லுகிறார். ஆகவே நாம் விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் கேட்போமாக. அவரே நம்முடைய மனவிருப்பங்களை நமக்கு அருளிச்செய்கிறவர். வேதம் சொல்லுகிறது, “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).
இளமையில் இஸ்ரவேல் ஜனத்துக்கு இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்ட சாலொமோன், கர்த்தரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவருடைய விருப்பமெல்லாம் தேவஜனத்தை நியாயம் விசாரிக்கும்படியாக ஞானமுள்ள இருதயம் தனக்கு வேண்டும் என்பதாகவே இருந்தது.
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: “இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்” (2 நாளா. 1:11,12).
ஆம். நம் அருமை ஆண்டவர் நாம் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுவதற்கும் மிக அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறவர். நாம் கேட்கிறவற்றையும் நமக்குத் தருவார். நாம் கேட்காத மேன்மைகளையும் தந்தருளுவார். அவரைப்போல காருண்யமும், தயவும் மிக்கவர்கள் வேறு ஒருவருமில்லை. அவரைப்போல நம்மேல் அக்கறையும் கரிசனையும் கொண்டவர்கள் வேறு யார் உண்டு? ஆகவே, அவருடைய காருண்யங்களை நம்பி, கிருபாசனத்தண்டை கிட்டிச்சேருவோமாக.
இஸ்ரவேல் தேசத்துக்குச் சென்ற ஒரு குடும்பத்தினர், தாங்கள் சென்றதன் காரணத்தைக்குறித்து இப்படியாகச் சொன்னார்கள், “சாலொமோன் விரும்பினதையெல்லாம் தேவன் அவருக்கு அருளிச்செய்தார். அதுபோலவே சாலொமோனைத் தேடி பூமியின் கடையாந்தரத்திலிருந்து வந்த சேபா ராஜஸ்திரீ விருப்பப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தார். ஆகவே சாலொமோனிலும் பெரியவராகிய கர்த்தரிடத்திலே எங்களுடைய இருதயத்தின் சில வேண்டுதல்களையும் ஜெபங்களையும் அர்ப்பணித்து திட்டமான பதிலைப் பெற்றுக்கொள்ளவே கர்த்தருடைய தேசத்துக்குச் சென்றோம்” என்றார்கள்.
தேவபிள்ளைகளே, இராஜாவாகிய சாலொமோன் சேபா ராஜஸ்திரீக்கு விரும்பிய வெகுமதிகளைத் தந்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அல்லவா? சாலொமோனிலும் பெரியவர் உங்கள் அருகிலே நிற்கிறார். உங்களுடைய தேவைகளையெல்லாம் அவர் சந்தித்தருளுவார். அவரையே நோக்கிப்பாருங்கள்.
நினைவிற்கு:- “உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்” (1 சாமு. 20:4).