No products in the cart.
ஆகஸ்ட் 31 – உன்னுடனே கூட..!
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா. 41:10).
ஏசாயா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசன உரைகள் எத்தனை ஆறுதலாய் இருக்கின்றன! எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாகிவிட்டபோதிலும், இன்றைக்கும் அந்த வசனங்கள் நம்மோடுகூட பேசுகின்றன. நம்மை வழிநடத்துகின்றன.
வியாதிப்படுக்கையில் ‘பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கிறேன்’ என்று கர்த்தர் தேற்றுகிறார். தனிமையான நேரங்களில் ‘பயப்படாதே, நான் உன்னோடுகூட இருக்கிறேன்’ என்று தேற்றுகிறார். பொல்லாத மனுஷர் நமக்கு விரோதமாக எழும்பி, நம்மை அழிக்க சதி திட்டங்களைத் தீட்டும்போது கர்த்தர் ‘பயப்படாதே நான் உன்னோடேகூட இருக்கிறேன்’ என்கிறார். எந்த சூழ்நிலையிலும் கர்த்தருடைய வார்த்தை ‘பயப்படாதே’ என்று நம்மை தேற்றிக்கொண்டேயிருக்கிறது.
பயமில்லாத மனுஷர்கள் உலகத்தில் ஒருவருமே இல்லை. சாத்தான் பயத்தின் ஆவிகளைக் கொண்டுவருகிறான். திகிலைக் கொண்டுவருகிறான். சிறு சிறு பிரச்சனைகளிலும் உள்ளத்தைக் கலங்கச் செய்துவிடுகிறான். அதேநேரம், நீங்கள் கர்த்தர்மேலும், அவருடைய வாக்குத்தத்தங்களின்மேலும் சார்ந்திருப்பீர்களென்றால், பயத்தின் ஆவி உங்களை மேற்கொள்ளுவதில்லை. வேதம் சொல்லுகிறது, “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1 யோவான் 4:18).
நான் உன்னுடனேகூட இருக்கிறேன் என்று சொல்லுகிறவர், உங்களைக் காக்கும்படி கருத்துள்ளவராய் இருக்கிறார். அவர் எப்படி உங்களோடு இருக்கிறாராம் தெரியுமா? உறங்காமலும் தூங்காமலும் இருக்கிறார்.
வேதம் சொல்லுகிறது, “உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை” (சங். 121:3,4). “கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங்.127:2) கர்த்தர் உங்களைக் காக்காவிட்டால் யாராலும் உங்களைக் காக்கமுடியாது. கர்த்தர் உங்களோடுகூட இருந்து உங்களைக் காக்கிறவராயிருக்கிறார்.
மாத்திரமல்ல, உங்களைத் தூக்கிச் சுமந்துசெல்ல கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். எத்தனை காலங்கள் கவலைகளையும், பாரங்களையும் நீங்களே சுமந்துகொண்டிருப்பது? எத்தனை காலம் துயரங்களையும், துன்பங்களையும் உங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டிருப்பது? எத்தனை காலம் தனிமையின் போராட்டங்களை உங்களுக்குள்ளே வைத்து தவித்துப்போய் அமர்ந்திருப்பது? உங்களுடைய பாரத்தை கர்த்தர்மேல் வைக்கும்போது, உங்களுடைய பாரத்தை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்து சுமக்க கர்த்தர் கிருபையுள்ளவராய் இருக்கிறார்.
தேவபிள்ளைகளே, ஒரு தகப்பன் தன் பிள்ளையை தோளின்மேல் சுமந்துகொண்டு போவதைப்போலவும், கழுகு தன் குஞ்சுகளை செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போவதைப்போலவும் கர்த்தர் உங்களைப் பாதுகாப்பாக ”சுமந்து செல்கிறார். இது நமக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! ‘கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?’ என்று விசுவாசத்துடன் அறிக்கை செய்யுங்கள். ஆறுதலும் தேறுதலும் தர கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார்.
நினைவிற்கு:- “பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி. 1:17,18).