No products in the cart.
ஆகஸ்ட் 26 – கர்த்தருடைய சத்தம்!
“பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்” (ஆதி. 3:8).
“பகலில் குளிர்ச்சியான வேளையிலே” என்ற வாக்கியத்துக்கு இரண்டுவிதமான அர்த்தங்களுண்டு. முதல் அர்த்தம், மிக அதிகாலை வேளையிலே என்பதாகும். ‘அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்’ என்று கர்த்தர் சொன்னார் அல்லவா? ஒரு நாளின் மிக குளிச்சியான வேளை, அதிகாலை நான்கு மணிமுதல் ஐந்து மணிவரையுள்ள வேளைதான்.
இரண்டாவது, பகலில் குளிர்ச்சியான வேளை என்பது, கர்த்தருடைய உள்ளத்தைக் குளிரப்பண்ணுகிற வேளை. அதுதான் துதி மற்றும் ஆராதனையின் வேளை. ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைப் பாடி, ஸ்தோத்திரித்து, துதித்து மகிழும்வேளை. அப்பொழுது துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர் இறங்கி வருகிறார்.
கர்த்தர் நம்மோடு பேசுகிறவர். அவருடைய சத்தத்தை இன்பமாய் தொனிக்கப்பண்ணுகிறவர். ‘என் பிரியமே, நீ என்னுடையவன், என்னுடையவள்’ என்று அவர் சொல்லும்போது, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு நம்முடைய உள்ளமெல்லாம் பரவசமடைகிறது. உன்னதப்பாட்டில் அவருடைய சத்தத்தை ஆத்தும நேசரின் சத்தமாகக் கேட்டு அவருடைய மார்பிலே சார்ந்துகொள்ளுகிறோம்.
வேதத்திலே, சாமுவேலைக் கர்த்தர் அழைத்தார். சாமுவேல் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார். வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்றான்” (1 சாமு. 3:10). அப்பொழுது சாமுவேலுக்கு மூன்று, அல்லது நான்கு வயது இருந்திருக்கும். கர்த்தருடைய சத்தம்தான் என்று பகுத்தறிகிற உணர்வு குழந்தையான சாமுவேலுக்கு இருந்திருக்காது.
ஆனால், கர்த்தருடைய குரலைக் கேட்டுப் பழகின சாமுவேல் பிற்காலத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்படுகிற வல்லமையான தீர்க்கதரிசியாய் விளங்கினார். சாமுவேல் வளர்ந்தார். கர்த்தர் அவருடனேகூட இருந்தார்.
கர்த்தர் பெரியவர்களை மட்டுமல்ல, சிறியவர்களையும் கூப்பிடுகிறார். உங்களுடைய பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும்படி அவர்களை ஆயத்தப்படுத்துங்கள். உங்கள் குமாரர்மேலும் குமாரத்திகள்மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவதாக அவர் வாக்களித்திருக்கிறாரே (யோவே. 2:28). உங்கள் சந்ததிமேலும் சந்தானத்தின்மேலும் அவர் தன் ஆவியை ஊற்றுவார்.
நீங்கள் கர்த்தரைக் காணவும், அவரோடு பேசவும் விரும்பினால், முதலாவது, உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).
இரண்டாவது, ஒரு சிறு பிள்ளையைப்போல உங்களைத் தாழ்த்துங்கள். “கர்த்தர் பேசுவீராக; கர்த்தாவே, சொல்லும் அடியேன் கேட்கிறேன், உம்முடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணும்” என்று மன்றாடிக்கொண்டேயிருங்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்களோடு பேசுவார்.
நினைவிற்கு:- “இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது” (எசே. 43:2).