No products in the cart.
ஆகஸ்ட் 25 – அலரிச் செடி!
“அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்” (ஏசா. 44:4).
ஆவிக்குரிய யாக்கோபுக்கும், இஸ்ரவேலுக்கும் கர்த்தர் அநேக ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். அதில் ஒரு ஆசீர்வாதம் ‘புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப்போல வளருவார்கள்’ என்பதேயாகும்.
வேதத்தில் கேதுரு, கர்வாலி, கொப்பேர், அத்தி மற்றும் ஒலிவமரம் போன்றவற்றிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டாலும், அலரிச்செடிக்கென்று விசேஷமான ஒரு இடம் உண்டு. வேதத்தில் ஐந்து இடங்களில் அலரிச்செடிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது (லேவி. 23:40; யோபு 40:22; சங். 137:2; ஏசா. 15:7; ஏசா. 44:4). இந்த அலரிச்செடியோடுகூட ஆறுகளும், நதியும் இணைக்கப்பட்டிருக்கிறதைக் காணலாம். லேவி. 23:40-லே, ஆற்றலரி என்று ஆற்றோடு இணைத்து கர்த்தர் எழுதி வைத்திருக்கிறார். யோபு 40:22-லே, நதியின் அலரிகள் என்று கர்த்தர் நதியோடு இணைத்து எழுதியிருக்கிறார். ஆம், அலரிச்செடி எப்போதுமே செழிப்புள்ள, தண்ணீர் நிறைந்த இடத்தில்தான் வளரும்.
உங்களுக்குள் ஜீவ நதியாகிய பரிசுத்த ஆவியானவர் பாய்ந்து வரும்போது, நீங்கள் அலரிச்செடியைப்போல செழிப்பாய் வளர்ந்து, மலர்ந்து மணம் வீசுவீர்கள். நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போல விளங்குவீர்கள். நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங். 1:3).
வேதத்தில் நதியைப்பற்றி எங்கெங்கெல்லாம் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பகுதிகளையெல்லாம் வாசிக்கும்போது ஆழமான சத்தியங்களை நீங்கள் அறிந்துகொள்ளமுடியும். ஆதியாகமத்தில் ஏதேன் தோட்டத்திலே ஒரு நதி ஓடி பிரிந்து நான்கு பெரிய ஆறுகளாயிற்று. அங்கே பொன் விளையும். அந்த ஆறு சாதாரண ஆறு அல்ல. பொன்னைப் போன்ற பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும் விளையச்செய்யக்கூடியது. மட்டுமல்ல, அந்த ஆறு உள்ளத்தை சந்தோஷிப்பிக்கிறது. அது ஒரு பேரின்ப நதி. வேதம் சொல்லுகிறது, “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்” (சங். 46:4). அந்த நதி பரிசுத்த ஆவியானவரே.
“விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்” (யோவா. 7:38,39). அந்த நதியை யோவான் கண்டபோது, “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்” (வெளி. 22:1) என்று சொல்லிப் பரவசமடைந்தார்.
தேவபிள்ளைகளே, எப்பொழுதும் பரிசுத்த ஆவியாகிய நதியோடு ஆழமானத் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். எந்த மரத்தின் வேர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் இருக்கிறதோ, அந்த மரம் தண்ணீரை உறிஞ்சி, இனிமையான கனிகளைக் கொடுக்கும். நீங்கள் கனி கொடுக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகள் நீங்களே. தண்ணீரண்டையில் நிலைத்திருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும்….மரத்தைப்போலிருப்பான்” (எரே. 17:8).