Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 24 – பவுலின் கண்களைத் திறந்தார்!

“மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்” (அப். 27:10).

நமது கண்கள் ஏன் திறக்கப்படவேண்டும்? பவுலும், நூற்றுக்கதிபதியும், போர்வீரர்களும் இத்தாலியின் தலைநகரமாகிய ரோமுக்கு புறப்பட்டுச் சென்றபோது கடுமையான காற்று கப்பலில் மோதியது. அங்கே பிரயாணம் செய்தவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். அப்பொழுது கர்த்தர் பவுலின் கண்களைத் திறந்தார். என்ன நடக்கப்போகிறது என்பதை பவுலுக்கு வெளிப்படுத்தினார்.

ஒரு தீர்க்கதரிசியின் கண்களானவை, வருவதை முன் அறிகிற கண்களாகும். இயேசு கிறிஸ்து எருசலேமை நோக்கிப்பார்த்தபோது, அவர் எருசலேமுக்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் கண்டார். “(எருசலேமுக்காக) கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது” என்றார் (லூக். 19:41,42).

அப்படியே, கி.பி. 70 ஆம் ஆண்டு தீத்து இராயன் புறப்பட்டு வந்து, எருசலேமை தீக்கிரையாக்கி, முற்றிலுமாக அதை அழித்துப்போட்டான். யூதர்களை சிதறடித்தான். தேவபிள்ளைகளே, வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் காணும்படி உங்களுடைய கண்கள் திறக்கப்படட்டும். நியாயத்தீர்ப்பு முதலில் தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாயிருக்கிறது.

‘டைட்டானிக்’ என்ற ஒரு பெரிய கப்பலில் செல்வந்தர்கள் உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த கப்பலின் முன்பகுதியில் உள்ள அதிகாரி, கப்பலுக்கு எதிரே தூரத்திலே இருந்த பெரிய பனிப்பாறையைக் கண்டு நடுங்கினார். கப்பல் கேப்டனோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘கப்பலை உடனே திருப்புங்கள்’ என்று அவசரச் செய்தி அனுப்பினார். அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து கப்பலை திசைதிருப்பியிருந்தால் அந்தப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாம்.

ஆனால், அந்த கேப்டனோ குடிவெறியில் மூழ்கியிருந்தபடியால், அந்த எச்சரிப்பை அலட்சியம் செய்தான். இதனால் அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதி நொறுங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டுபோனார்கள். தேவ ஜனங்களுக்கு வரப்போகிற ஆபத்துகளையும், பிரச்சனைகளையும் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்து எச்சரிக்கிறார். செவிகொடுக்க வேண்டியது நம்முடைய கடமை.

அன்றைக்கு ஏவாள் பழத்தின் அழகைக் கண்டாள். சர்ப்பம் கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டாள். ஆனால் அந்த பழத்துக்கு அப்பால் இருக்கிற தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் காணமுடியாதபடி அவளுடைய கண்கள் குருடாய் இருந்தன. லோத்து, சோதோம் கொமோராவின் நீர் வளத்தைக் கண்டாரே தவிர, அது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது, அழிக்கப்படப்போகிறது என்பதைக் காணவில்லை.

யூதாஸ்காரியோத்தின் கண்கள் முப்பது வெள்ளிக்காசுகளை மேன்மையுள்ளதாய் கண்டதே தவிர, அந்த பணத்தின் விளைவாக தான் நாண்டுகொண்டு சாகப்போவதை காணவில்லை.

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டால் நலமாயிருக்கும். வருங்காலத்தை அறிந்துகொள்ளும் தீர்க்கதரிசனக் கண்களை கர்த்தரிடத்தில் மன்றாடிப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்” (சங். 119:67).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.