Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 24 – நற்குல திராட்சச்செடி!

“அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச் செடிகளை நட்டு ….” (ஏசா. 5:2).

நீங்களே அந்த நற்குல திராட்சச்செடிகள். காட்டு திராட்சச்செடிகளோ அல்லது கசப்பான கனிகளைக் கொடுக்கும் திராட்சச்செடிகளோ அல்ல. கர்த்தர் உங்களைக் கல்வாரி சிநேகத்தோடு காண்பதால் நற்குலமான திராட்சச்செடியாகவே காண்கிறார். கிறிஸ்துவோடுகூட கல்வாரி அன்பினால் இணைக்கப்பட்ட அன்பின் கொடியாகக் காண்கிறார். கிறிஸ்துவின் மணவாட்டி சபையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய கொடிகளாகவே காண்கிறார். நீங்கள் நற்கனி தரும் நற்குல திராட்சச்செடிகள்.

நம்முடைய தேசத்திலே எத்தனையோ வகையான திராட்சச்செடிகள் இருக்கின்றன. சிவப்பு நிறத்திலுள்ள திராட்சப்பழங்கள், கருப்பு நிறத்திலுள்ள திராட்சப்பழங்கள், பச்சை நிறத்திலுள்ள திராட்சப்பழங்கள் என பல வகைகள் உண்டு. இவைகளோடுகூட விதைகளே இல்லாத மிகவும் சுவையுள்ள திராட்சப்பழங்களும் உண்டு. அதேநேரம், மிக புளிப்பாக, பற்கள் கூசி உதிர்ந்துவிடுமோ என்று எண்ணுகிற அளவு கொடிய அமிலத்தன்மை வாய்ந்த பச்சைத் திராட்சைவகையும் உண்டு.

ஆனால் கர்த்தருடைய தோட்டத்தில் நீங்களே நற்குல திராட்சச்செடிகள். ஒரு காலத்தில் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பே இருந்தீர்கள். காட்டு திராட்சக்கொடியாய் இருந்தீர்கள். முற்காலத்திலே மாம்ச இச்சையின்படியே நடந்து, மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தீர்கள் (எபே. 2:3).

கர்த்தர் உங்களை எப்படி நற்குல திராட்சச்செடியாக நாட்டினார் தெரியுமா? “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:6,7). கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலின் மூலமாக நீங்கள் நற்குல திராட்சச்செடியாக மாறுகிறீர்கள். இது ஆண்டவருடைய கிருபை. தேவனுடைய ஈவு.

கர்த்தர் இன்றைக்கும் தமக்கென்று தமது கொடிகளை தேவனுடைய தோட்டமாகிய சபையிலே நடுகிறார். அன்று ஏதேன் தோட்டத்திலே ஆதாம் ஏவாளை நாட்டினார். நற்குல திராட்சச்செடியாக தம்முடைய ரூபத்தையும், சாயலையும், மகிமையையும் அவர்களுக்கு தந்துதான் நாட்டினார். ஆனால், அவர்களோ பாவம் செய்து, கீழ்ப்படியாமல்போய், கசப்பான கனிகளையே அவருக்குக் கொடுத்தார்கள்.

கர்த்தர் நம்மை நற்கனிதரும் திராட்சக்கொடியாக நாட்டியிருக்கிறார் என்பது மிகப்பெரிய ஆசீர்வாதம்தான். ஆனால் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்திற்குப் பாத்திரவானாய் நாம் நடந்துகொள்ளுகிறோமா? “நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன், நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?” (எரே. 2:21).

தேவபிள்ளைகளே, இன்று நீங்கள் தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் நாட்டப்பட்ட கிருபையின் நாற்றாக இருக்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட நற்கனி தரும் திராட்சச்செடி என்பதை ஒரு நாளும் மறந்துபோகாதேயுங்கள்.

நினைவிற்கு:- “நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது” (சங். 80:8,9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.