No products in the cart.
ஆகஸ்ட் 17 – கர்த்தர் திறக்கிறார்!
“குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்” (சங். 146:8,9).
இயேசுகிறிஸ்து உங்கள் சரீரப்பிரகாரமான கண்களையும் திறக்க வல்லமையுள்ளவர். ஆன்மீகக் கண்களையும் பிரகாசிக்கச் செய்ய வல்லமையுள்ளவர். அப். பவுல், “தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்” (எபே. 1:19) என்று எழுதினார்.
ஒரு பக்கம் கர்த்தர், குருடரின் கண்களைத் திறந்தாலும், மறு பக்கம் சாத்தான் திறந்திருக்கிற கண்களைக் குருடாக்கிக்கொண்டிருக்கிறான். ஒருமுறை ஒரு பெரிய செல்வந்தனின் ஒரே மகனை சிலர் கடத்திச்சென்று அவன் கண்களில் கரப்பான் பூச்சியைக் கட்டி, ஒரு இருண்ட குகைக்குள் போட்டுவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாக அந்தக் கரப்பான் பூச்சி, அவனது இரண்டு கண்களையும் துளைத்தது. அவன் முற்றிலுமாய் பார்வையை இழந்தான்.
அதன் பின்பு, பிச்சை எடுப்பவர்களிடம் அவனை நல்ல விலைக்கு விற்றுப்போட்டார்கள். சீரும் சிறப்புமாய் வாழ்ந்த அந்தச் சிறுவன், கண்கள் தெரியாத நிலைமையில் பரிதாபமாய் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். சாத்தானும் அதைத்தான் ஆதாமுக்குச் செய்தான். ஆசை காட்டி, பாவம் செய்ய வைத்து, ஆதாமின் ஆத்தும கண்களைக் குருடாக்கிவிட்டான். சாத்தான் ஒரு கொலை பாதகனும், திருடனும்கூட.
இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).
மிகவும் அருமையாய்க் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டவன் சிம்சோன். ஆனால் சாத்தானோ, வேசித்தன மயக்கத்தைக் கொண்டுவந்து, சிம்சோன் கண்களைக் கடைந்து, இரத்தக் குளமாக்கி கெடுத்துப்போட்டான். நுங்கை அதின் குழியிலிருந்து தோண்டி எடுப்பதைப்போல சிம்சோனின் கண்களைத் தோண்டி எடுத்தார்கள்.
ஐயோ, இனி வாழ்நாளெல்லாம் அவன் குருடன். பெலிஸ்திய குரங்காட்டி குரங்கை வைத்து வித்தைக்காட்டுவதைப்போல இஸ்ரவேலின் நியாயாதிபதியாகிய சிம்சோனை வேடிக்கைப் பொருளாக்கி, வித்தைக்காட்டினார்கள். கண்களில் இச்சையும், விபச்சாரத்தின் மயக்கமும் உங்களுக்குள் நுழையாதபடி பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஆன்மீக தரிசனத்தைக் கொடுக்கும் மனக்கண்களை இழந்து போகாதிருங்கள்.
இஸ்ரவேலின் இராஜாவாய் இருந்த சிதேக்கியாவுக்கு ஏற்பட்டது என்ன? எரேமியாவால் உரைக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைக்கு அந்த இராஜா செவிசாய்க்கவில்லை. பாபிலோன் இராஜா படையெடுத்து வந்தார்.
வேதம் சொல்லுகிறது, “சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்” (எரே. 39:7). பின்பு “அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்” (எரே. 52:11).
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய எச்சரிப்புகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுங்கள். எப்போதுமே தூய்மையாய் நடந்து கர்த்தருடைய கிருபைக்குள்ளே உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” (மத். 6:22).