Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 15 – பின்சென்றான்!

“இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்” (மாற். 10:52).

இயேசு அன்போடு பர்திமேயுவைப் பார்த்து, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்றிருக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு பர்திமேயு ‘நான் பார்வையடைய வேண்டும்’ என்றான். கர்த்தர் அவனுக்குப் பார்வை கொடுத்து, நீ போகலாம் என்று சொன்னபோதிலும்கூட, அவன் தன் வீட்டுக்குப் போகவில்லை. இனத்தாரிடம் போகவில்லை. இயேசுவையே பின்தொடர்ந்தான்.

ஒரு முறை கர்த்தர் பத்து குஷ்டரோகிகளை குணமாக்கினார். தங்களை ஆசாரியனுக்குக் காட்டப்போகையில் பத்து பேரும் குணமாக்கப்பட்டார்கள். அதில் ஒன்பதுபேர் அவரிடம் வரவேயில்லை. ஒருவன்மாத்திரம் திரும்பி வந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். இந்த பர்திமேயு நன்றி செலுத்தினது மட்டுமல்ல, இயேசுவைப் பின்பற்றும் பாக்கியத்தையும் பெற்றான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கண் தெரியாத ஒரு வாலிபனை சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டுவந்திருந்தார்கள். ஊழியர் மிகுந்த மனதுருக்கத்தோடு அவனுக்காக ஜெபித்தபோது, அவனுடைய கண்களைக் கர்த்தர் அற்புதமாய்த் திறந்தார். மறுநாள் அந்தக் கூட்டத்திற்கு வந்து சாட்சி சொல்லும்படி ஊழியர் சொல்லியனுப்பியிருந்தார். அவனோ, வரவில்லை. அடுத்த நாளும் வராததால் ஊழியர் அவனைத் தேடி அவனது விலாசத்துக்குச் சென்றார்.

அவன் சொன்னான், “மூன்று வருடத்திற்கு முன்பு திடீரென்று கண் குருடானது. அதிலிருந்து ஒரு சினிமாவைக்கூட நான் பார்க்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வந்த எல்லா சினிமாக்களையும் பார்த்துவிட்டு, பிறகு சாட்சி சொல்லலாம் என்று எண்ணினேன்” என்றான்.

ஆனால் இந்த பர்திமேயுவோ கண் திறக்கப்பட்டவுடன் தன்னுடைய இனத்தவர்களைக் காணவேண்டுமென்று விரும்பவில்லை. உலக உல்லாசங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்பவில்லை. தியாகத்தோடு இயேசுவையே பின்செல்ல விரும்பினான். இயேசுவைப் பின்பற்றுவது சாதாரண காரியமல்ல. பாடுகளையும், உபத்திரவங்களையும் சகிக்கவேண்டியதிருக்கும். பரிசேயரின் சதியையும், சிலுவையின் கொடுமையையும் சகிக்கவேண்டியதிருக்கும்.

ஒருமுறை ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து, “ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (லூக். 9:57,58). அவரைப் பின்பற்றுவேன் என்று சொல்லுகிறவர்கள் அநேகம்பேராய் இருந்தாலும், அவருக்காக சொகுசான நித்திரையையும், வசதியான படுக்கையையும், இன்பமான உலக வாழ்க்கையையும் விட்டுவிட எல்லோருமே முன்வருவதில்லை.

இயேசு சொன்னார், “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத். 16:24).

தேவபிள்ளைகளே, அவரோடு நீங்களும் பாடுகளைச் சகித்து, அவரையே பின்பற்றுவீர்களானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வீர்கள். சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறவர்கள், சீயோன் பர்வதத்திலே ஆட்டுக்குட்டியானவரோடு என்றென்றைக்கும் நிற்பார்கள்.

நினைவிற்கு:- “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” (லூக். 9:62).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.