No products in the cart.
ஆகஸ்ட் 08 – கற்றுக்கொள்வதினால் இளைப்பாறுதல்!
“என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:29).
இளைப்பாறுதலின் ஆறாவது வழி, கற்றுக்கொள்வதாகும். கிறிஸ்துவினுடைய நுகத்தை உங்கள் ஆத்துமாவின்மேல் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் தெய்வீக இளைப்பாறுதலை உங்களுக்குத் தந்தருள்வார். சரி, நுகம் என்பது என்ன? பண்டைய நாட்களில் ஏர் உழுவதற்கோ, அல்லது வண்டி இழுப்பதற்கோ, மாடுகளைப் பயன்படுத்துகிறவர்கள் இரண்டு மாடுகளை ஒன்றாய் இணைப்பதற்கென அவைகளின் தோள்களிலே வைத்துப் பயன்படுத்துகிற உருண்டையும் நீளமுமான தடிதான் நுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரே வளர்த்தி, ஒரே பெலன், ஒரே வயதுள்ள இரண்டு மாடுகள் அதிலே இணைக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் வண்டி சீராகவும், செம்மையாகவும் ஓடும். அப்.பவுல், “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” என்றார் (2 கொரி. 6:14,15).
திருமண காரியங்களிலும், வியாபார காரியங்களிலும், இரட்சிக்கப்படாத ஒரு நபரோடு இணைக்கப்படும்போது, அது நிம்மதியை நிரந்தரமாக இழக்கச்செய்யும். மன சமாதானம் போய்விடும். ஆரம்பம் நன்றாய் இருந்தாலும், முடிவோ மகா வேதனையாய் இருக்கும். ஆகவே, உலகப்பிரகாரமான நன்மைகளை எதிர்பார்த்து, தேவபிள்ளைகள், ஒருநாளும் அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது.
ஒருகாலத்தில் நாம் பாவ அடிமைத்தனத்திலே தவித்தோம். சாத்தானுடைய நுகம் நம் ஆத்துமாவின்மேல் கொடுமையாய் வைக்கப்பட்டிருந்தது. கர்த்தரை நோக்கிப் பார்த்தபோது, “நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை” (எரே. 30:8) என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினார். கர்த்தரை நோக்கிப்பார்க்காததினால், இன்று சாத்தானானவன் அநேக வாலிபர்களைத் தீயபழக்கங்களுக்கு ஆளாக்கி மோசமான பாதையில் நடத்திக்கொண்டிருக்கிறான்.
இயேசுகிறிஸ்துவண்டை நீங்கள் வரும்போது, அவருடைய நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும். “என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நுகத்தை ஏற்றுக்கொள்ளும்போது, உங்களுடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
நுகத்தடியின் ஒரு பகுதியிலே இயேசுவும், மறுபகுதியிலே நீங்களும் அவரோடு இணைக்கப்படுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களாய் நடந்துகொள்ளுகிறீர்களா? வேதம் சொல்லுகிறது, “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” (1 யோவான் 2:6). தேவபிள்ளைகளே, நீங்கள் அவரோடு இணைக்கப்படும்போது பாரமான ஒன்றையும் உங்கள்மேல் அவர் சுமத்தமாட்டார். அவரிடத்தில் கற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து வாழ்க்கை நடத்துவதும், அவருடன் இணைந்து ஊழியம் செய்வதும் உங்களுக்கு பாக்கியமானவையாய் அமையும்.
நினைவிற்கு:- “நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” (எசேக். 34:27).