Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 04 – வழியருகே!

“திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்” (மாற். 10:46).

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்துவிட்டு, கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, விருட்சங்களுக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார்கள். அப்பொழுது கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, ‘ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்’ என்றார். அதற்கு அவன்: ‘நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துகொண்டேன் என்றான்’ (ஆதி. 3:10).

அதுபோல கர்த்தர் பர்திமேயுவைக் கூப்பிட்டு, ‘பர்திமேயுவே, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கேட்டிருந்தால், ‘நான் எரிகோவில் இருக்கிறேன். வழியருகே இருக்கிறேன். பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று அவன் சொல்லியிருக்கக்கூடும்.

“வழியருகே” உட்கார்ந்திருப்பது என்பது ஆபத்தானது. இயேசு அநேக விசேஷங்களை உவமைகளாகச் சொன்னார். அதில் ஒன்று வழியருகே விதைக்கப்பட்ட விதைகள். வழியருகே விதைக்கப்பட்ட விதைகளை ஆகாயத்துப் பறவைகள் வந்து கொத்திக்கொண்டு போயின. வேதம் சொல்லுகிறது, “கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது. பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது” (மத். 13:3,4).

விசாலமான அந்த வழியிலே அநேகர் போவதால் தொடர்ந்து கால்களால் மிதிபட்டு தரையானது கடினப்பட்டுப்போய்விடுகிறது. விதைக்கப்பட்ட விதை முளைக்கும்போது அதன் வேர் தரைக்குள் செல்வது கடினம். தரையைப் பண்படுத்தவும் கடினமாயிருக்கும். இப்படி அநேகருடைய இருதயம் கடினப்பட்டுப்போயிருக்கிறபடியினாலே அப்படிப்பட்டவர்கள் வசனத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

வேதத்திலே, யாக்கோபின் குமாரனாகிய யூதா, வழியருகே உட்கார்ந்திருந்த ஒரு வேசியைக் கண்டு பாவத்தில் விழுந்தார் (ஆதி. 38:15-18). சாலொமோன் ஞானியும்கூட, “அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்” (நீதி. 7:10) என்று எழுதுகிறார்.

விசாலமான வழியானது அழிவுக்கு நேராய் அழைத்துச்செல்லும். ஆகவேதான் இயேசுகிறிஸ்து, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றார் (மத். 7:13,14).

இரண்டு அத்திமரங்களைக்குறித்து வேதத்தில் நாம் வாசிக்கிறோம். ஒன்று, வழியோரமாக நின்ற அத்திமரம். அடுத்தது, தோட்டத்திற்குள் நின்ற அத்திமரம். வழியோரம் நின்ற அத்திமரத்திற்கு எந்த பாதுகாவலும் இல்லை. எஜமானும் இல்லை. தோட்டக்காரனும் இல்லை. ஆனால் தோட்டத்திற்குள் நின்ற அத்தி மரத்தை பராமரிப்பதற்கும், கவனித்துக்கொள்ளுவதற்கும் தோட்டக்காரன் இருந்தார். வழியருகே நின்ற அத்திமரம் சபிக்கப்பட்டுப்போனது. ஆனால் தோட்டத்திலிருந்த அத்திமரம் தண்டனைக்குத் தப்பியது.

தேவபிள்ளைகளே, வழியோரம் இருக்கிற அத்திமரத்தைப்போல இராதீர்கள். கர்த்தருடைய சபையாகிய தோட்டத்திற்குள் நிலைத்திருப்பீர்களென்றால், ஊழியர்கள் உங்களுக்காக பரிந்து பேசி ஜெபிப்பார்கள் அல்லவா? அது உங்களை தேவ கிருபைக்குள் இருக்கச்செய்யும். நீங்கள் பாதுகாப்பிற்குள் இருப்பீர்கள்.

நினைவிற்கு:- “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவா. 15:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.