No products in the cart.
ஆகஸ்ட் 01 – இளைப்பாறுதல்!
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).
அடிமைத்தனத்தின் நுகத்தை சுமந்து தவித்துக்கொண்டிருக்கும் ஒரு மாட்டை அவிழ்த்துவிட்டால் அது சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்து வரப்பினண்டை போய் அங்குள்ள புல்லை மேயும். அந்த மாட்டைத் தடவிக்கொடுத்தால் அதற்கு சுகமாக இருக்கும். மத்தியான வெயிலிலே அதை குளிப்பாட்டும்போது குளிர்ந்த தண்ணீரில் அது ஆனந்தமாய் நின்றுகொண்டிருக்கும்.
பாவ அடிமைத்தனத்தில் தவிக்கும் மனுஷனைக் கர்த்தர் விடுதலையாக்கி, கல்வாரியண்டை கொண்டுபோய் தன்னுடைய இரத்தத்தை ஊற்றி அவனைக் கழுவி சுத்திகரிக்கிறார். புல்லுள்ள இடங்களில் மேயப்பண்ணி, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். இதன்மூலம் ஆத்துமாவில் எவ்வளவு பெரிய இளைப்பாறுதல் கிடைக்கிறது!
கர்த்தர், சாத்தானின் நுகத்தடியை முறித்துப்போடும்போது எவ்வளவு பெரிய விடுதலையும், எவ்வளவு பெரிய ஆனந்தமும், எவ்வளவு பெரிய இளைப்பாறுதலும் ஏற்படுகிறது! “நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை” (எரே. 30:8).
ஒரு முறை மலேசியாவிலுள்ள பினாங்கு என்ற இடத்திலே, போதை மருந்திலே சிக்குண்டு வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருந்த வாலிப சகோதர சகோதரிகளை ஒரு இளம் போதகர் தேடிப்போய் அவர்களிடத்திலே கிறிஸ்துவைப் பிரசங்கித்து, ஊக்கமாக ஜெபித்து, விடுதலையாக்கி சபைக்குக் கொண்டுவந்தார். முன்பு அவர்கள் பெற்றோராலும், மருத்துவர்களாலும், அரசாங்கத்தாலும் கைவிடப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
ஆனால் கர்த்தரிடத்தில் வந்தபோதோ, கர்த்தர் அந்த போதை மருந்தின் பாதிப்பிலிருந்து முழு விடுதலை கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த தீய பழக்கம் திரும்ப வராதபடிக்கு அந்த நுகத்தடியை முறித்துப்போட்டார். அவர்கள் பரிசுத்தவான்களாய் கர்த்தரை ஆடிப்பாடித் துதித்தார்கள். அவர்கள் சாத்தானைப் பார்த்து சவால்விட்டு, “சாத்தானே, கர்த்தர் எங்களை விடுதலையாக்கியிருக்கிறார். இனி உனக்கு எங்கள்மேல் எந்த அதிகாரமும் இல்லை. பிசாசே, இனி நீ எங்களை அடிமை கொள்வதில்லை. நாங்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாக இருக்கிறோம்” என்று முழங்கினார்கள்.
ஆம், சாத்தானின் நுகத்தடி முறிகிற வேளையிலே அதனுடைய அடிமைத்தனத்தின் ஆதிக்கமும் முறிந்துபோகிறது. விடுதலை பெற்றவர்கள் கிறிஸ்துவினுடைய பிரசன்னத்திற்கு ஓடிவந்து அவருடைய சமுகத்திலே மகிழ்ச்சியாய் இளைப்பாறுகிறார்கள். கர்த்தருக்காக கனிதரும் வாழ்க்கைக்குள்ளாக கடந்துசெல்லுகிறார்கள்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின்மூலம் கர்த்தர் சொல்லுகிறார், “வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” (எசே. 34:27). தேவபிள்ளைகளே, அந்த ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு இயேசு உங்களை அன்போடுகூட அழைக்கிறார். கர்த்தர் கொடுக்கிற சந்தோஷத்திற்குள்ளும், சமாதானத்திற்குள்ளும் கடந்து வாருங்கள்.
நினைவிற்கு: “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்” (எபி. 4:3).