No products in the cart.
ஆகஸ்ட் 01 – அதிகாலையில்!
“நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:18).
கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவாரானால் நிச்சயமாகவே ஒவ்வொருநாளும் கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் உற்சாகமாய் நாம் கடந்துசெல்ல முடியும். “நான் உங்களோடு இருப்பேன்” என்று கர்த்தர் தம்முடைய பிரசன்னத்தை நமக்கு வாக்களித்திருக்கிறார் அல்லவா?
வேதத்தில் பல வாக்குத்தத்தங்கள் நமக்கு இருந்தாலும், தேவ பிரசன்னத்தைக் குறித்த பல பிரசங்கங்களைக் கேட்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலே ஏனோ பல வேளைகளில் அவர் நம்மோடு இருப்பதை நம்மால் உணர முடிவதில்லை. வெறுமையும், தனிமையும் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. மனுஷராலும் கர்த்தராலும் கைவிடப்பட்டதுபோல உணருகிறோம்.
தேவ பிரசன்னத்தை எப்பொழுதும் நம்மோடு காத்துக்கொள்வதற்கு அதிகாலை வேளையில் எழும்பும்போதே கர்த்தருடைய பிரசன்னத்தின் எதிர்பார்ப்போடு எழவேண்டுமென்பதே முதலாவது ஆலோசனை. கர்த்தரை கனப்படுத்தி உங்கள் புதிய நாளின் முதல் பகுதியை அவருக்குக் கொடுங்கள்.
அதிகாலையில் அவருடைய பிரசன்னத்தைத் தேடி, வாஞ்சித்து, அவருடைய மகிமையால் நிரப்பப்படுவீர்களானால், அந்த நாள் முழுவதும் கர்த்தர் உங்களோடு இருப்பதை உணருவீர்கள். அந்த நாளின் சகல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பதற்கு வேண்டிய தேவபெலனை பெற்றுக்கொள்ளுவீர்கள்.
அதிகாலை எழும்பும்போதே, “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” என்று உற்சாகத்தோடு சொல்லுங்கள். கர்த்தரை மகிமைப்படுத்தவும், தேவ பிரசன்னத்தோடு பெரிய காரியங்களைச் செய்யவும், கர்த்தர் கொடுத்திருக்கிற வாய்ப்புகளுக்காக அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் சொல்லுகிறார், “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதி. 8:17). “என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்” (நீதி. 8:20, 21).
ஒரு முறை நான் தனிமையாய் இருந்து ஜெபிப்பதற்காக திருப்பத்தூர் சென்றிருந்தேன். அங்கே பொழுது விடிகிற சமயத்திலே என் அறைக்கு வெளியே ஏராளமான குருவிகளின் சத்தத்தைக் கேட்டு மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன். என் அறைக்கு வெளியே ஒரு விளக்கு எரிந்ததினால் இரவிலே ஏராளமான ஈசல்கள் வந்து விழுந்து கிடந்தன. அதைப் பார்த்த குருவிகள் ஆனந்தமாய் சத்தமிட்டுக்கொண்டே அவற்றை உண்டன. அவை அவற்றை உண்டு சென்றபின்பு சிறிது நேரத்தில் வேறு சில குருவிகள் வந்தன. அந்த குருவிகளுக்கோ எந்த உணவும் கிடைக்கவில்லை. தாமதமாக வந்ததால் அவைகளுக்கு உணவு கிடைக்காததைக் கண்டு அவைகளைப் பார்த்துப் பரிதபித்தேன்.
இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்னாவைப் பொழிந்த ஆண்டவர், அதை அதிகாலையிலேதான் சேகரிக்க வேண்டுமென்று சொன்னார். தேவபிள்ளைகளே, அதிகாலையிலே எழுந்து மன்னாவை சேகரிக்கிறவர்களால்மட்டுமே தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து மகிழமுடியும்.
நினைவிற்கு:- “கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்” (சங். 5:3).