Appam, Appam - Tamil

ஆகஸ்டு 18 – அதிசயங்களைப் பார்க்கும்படி திறந்தார்!

“உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங். 119:18).

குருடனாயிருந்த பர்திமேயு, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கதறினான். அவனுடைய நோக்கம், தன் கண்கள் திறக்கப்பட்டு, இயேசுவைப் பார்க்கவேண்டும் என்பதும் அவருக்குப் பின்செல்லவேண்டும் என்பதுமாகவே இருந்தது. கர்த்தர் உங்களுடைய கண்களைத் திறப்பதற்கு முன்பாக, உங்கள் உள்ளத்தின் ஆழத்திலுள்ள நோக்கங்களைப் பார்க்கிறார். ஆகவே, ‘ஆண்டவரே, நான் உம்மைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்’ என்று கேளுங்கள்.

பலவகையான கண்களுண்டு. உலகத்தாருக்குப் பொல்லாத வன்கண்கள் இருக்கக்கூடும். பொறாமையின் கண்கள் இருக்கக்கூடும். குடிபோதையினால் சிவந்து போயிருக்கிற கண்களுண்டு. சுட்டெரித்துவிடுவதுபோல பார்க்கும் கோபக்கனலுள்ள கண்களுமுண்டு.

ஆனால், கிறிஸ்துவைக் காண்கிற ஒளிமிகுந்த கண்களே நமக்குத் தேவை. பிரகாசமான மனக்கண்கள் தேவை. சொப்பனங்களையும், தரிசனங்களையும் காண்கிற விசுவாசக் கண்கள் தேவை. தாவீது ராஜா இன்னொரு விசேஷமான கண்களுக்காய் ஜெபித்தார். அது வேதத்தின் அதிசயங்களை காணக்கூடிய கண்கள் (சங். 119:18).

சாதாரணமாய் மேலோட்டமாய் வேதத்தை வாசித்துவிட்டுச் செல்லுகிறவர்கள், அதினுடைய மறைபொருட்களை அறிந்துகொள்ளமுடியாது. அவர்கள் வாசிப்பதெல்லாம், நுனிப்புல் மேய்வதுபோலத்தான் இருக்கும். வேத வெளிப்பாடுகள், வேதத்தின் மறைபொருட்களை ஆராயவேண்டுமென்றால், கண்களைத் திறந்து, வேத வசனங்களை தியானித்து, ஆழங்களுக்குள் செல்லவேண்டும்.

வேதத்தை எழுதின பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு வேதத்திற்குள் செல்வீர்களென்றால், ஒவ்வொரு வேத வசனமும், வைரச்சுரங்கத்திலிருந்து கிடைக்கும் விலையேறப்பெற்ற மாணிக்கக் கற்களாக விளங்கும்.

உங்களுடைய இருதயக் கண்கள், மனதின் கண்கள், அறிந்துகொள்ளக்கூடிய அறிவின் கண்கள் ஆகியவை திறக்கப்படட்டும். அன்றைக்கு லீதியாள், பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படியாக கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்தருளினார் (அப். 16:14).

வேதப்புத்தகத்தின் மொத்த மகத்துவத்தையும் சங்கீதம் 119 பிரதிபலிக்கிறது. வேதப்புத்தகத்திலே மிக நீளமான சங்கீதமும், அதிகாரமும் இதுதான். இதில் மொத்தம் 176 வசனங்கள் இருக்கின்றன. அத்தனை வசனங்களும் வேதத்தின் முக்கியத்துவங்களை உங்களுக்குச் சொல்லுகின்றன. உங்கள் கண்கள் திறக்கப்பட்டு இருந்தால்தான் ஆவியும், ஜீவனுமாயிருக்கிற வேத வசனங்களின் ஆழங்களையும், மறைபொருட்களையும் உங்களால் அறிந்துகொள்ளமுடியும்.

இந்த சங்கீதத்தை வேதபாரகனான எஸ்றா என்ற பக்தன் எழுதியிருக்கக்கூடும் என்று அநேக வேத பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ். 7:10) என்று வேதம் சொல்லுவதே இதன் காரணம்.

தேவபிள்ளைகளே, திரளான பொன் வெள்ளியைப் பாக்கிலும் கர்த்தர் விளம்பின வேத வசனங்களே உங்களுக்கு மேலானதாக விளங்கட்டும். அதை ருசிக்கும்போது, அவை தேனிலும் தெளிதேனிலும் மதுரமாய் இருப்பதைக்காண்பீர்கள்.

நினைவிற்கு:- “அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்” (ஏசா. 29:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.