No products in the cart.
அக்டோபர் 30 – யாபேஸ்!
“அவன் (யாபேஸ்) தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்” (1 நாளா. 4:9).
தன் துக்கத்தை ஜெபத்தினால் சந்தோஷமாக்கிக்கொண்ட ஒரு மனிதன்தான் யாபேஸ். கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, அதற்கு பதில் அளிக்கிறவரும்கூட என்பதை நிரூபித்தவர்தான் யாபேஸ். தன் துயரங்கள், துன்பங்களையெல்லாம் தேவபெலத்தோடுகூட துடைத்தெறியவேண்டும் என்று திட்டமாய் தீர்மானம் செய்தவர்தான் யாபேஸ்.
நம்முடைய ஆண்டவர் பட்சபாதமுள்ளவரல்ல (அப். 10:34). யாபேஸின் ஜெபத்தைக் கேட்டு பதிலளித்தவர் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபத்தையும் கேட்டு பதிலளிப்பார். உங்களுடைய துக்கம் சந்தோஷமாய் மாறும். உங்களுடைய கண்ணீர் ஆனந்தக்களிப்பாய் மாறும். தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும். மாராவின் கசப்பு மதுரமாய் மாறும்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபிப்பதுமட்டுமே. எலியா நம்மைப்போல பாடுள்ள மனுஷனாய் இருந்தாலும், கருத்தாய் ஜெபித்தார். “நீங்கள் ஜெபம்பண்ணும்பொழுது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற். 11:24).
இன்றைக்கே நேரம் ஒதுக்கி ஊக்கமான ஒரு ஜெபம் செய்வீர்களா? யாக்கோபைப் போல, “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடவேமாட்டேன்” என்று மன்றாடுவீர்களா?
யாபேஸின் தாய்க்கு என்ன துக்கமோ தெரியவில்லை. யாபேஸைப் பெற்றெடுத்தபொழுது ‘நான் துக்கத்துடனே அவனைப் பெற்றேன்’ என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள். சாதாரணமாக எந்தத் தாயும் குழந்தை பிறந்தவுடனே இளம் பாலகனின் முகத்தைக் கண்டு, அவள் அதுவரை அனுபவித்திருந்த துக்கங்களையெல்லாம் மறந்து பூரிப்படைந்துவிடுவாள். பத்து மாதம் சுமந்த வேதனையும், பிரசவத்தில் உண்டாகும் கடும் வேதனையும் மாறி சந்தோஷமடைவாள்.
ஆனால் அந்தத் தாயோ துக்கத்தோடுதான் இருந்தாள். தன் துக்கத்தையும் பிள்ளைமேல் சுமத்தி துக்கம் நிறைந்தவன் என்ற அர்த்தத்துடன் பெயரைச் சூட்டினாள். அவளுடைய துக்கத்திற்குக் காரணம் என்ன என்று வேதம் சொல்லவில்லை.
ஒருவேளை அவள் மிகக்கொடிய வறுமையிலோ, வியாதியிலோ வாடி இருந்திருக்கக்கூடும். அல்லது அவளுடைய கணவன் அவளை விட்டுவிட்டு வேறு பெண்ணோடு வாழ்ந்திருக்கக்கூடும். அசட்டைசெய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கக்கூடும். துக்கம் அவளோடு மாத்திரமல்ல, அவளுடைய மகனையும் தொடர்ந்தது.
உங்களுடைய துக்கத்தை யார் அறிந்தாலும் சரி அறியாவிட்டாலும் சரி, கர்த்தர் நிச்சயமாகவே அறிந்தவராயிருக்கிறார். உங்கள் கண்ணீரின் ஜெபத்தை புறக்கணித்துவிட்டு ஒருநாளும் அவர் கடந்து செல்லுகிறவர் அல்ல. உங்களுடைய ஜெபம் அவருடைய உள்ளத்தை உருக்குகிறது. ஏன் தெரியுமா? அவரும் துக்கத்தின் பாதையிலே நடந்து சென்றவர் என்பதாலேயே.
தேவபிள்ளைகளே, நிச்சயமாகவே அவர் உங்கள் துக்கத்தை அறிந்து, தன்னுடைய பொற்கரத்தினால் உங்கள் கண்ணீர் யாவையும் தொட்டு துடைத்தருள்வார்.
நினைவிற்கு:- “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசா. 53:3).