No products in the cart.
அக்டோபர் 29 – யோவான்ஸ்நானன்!
“ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத். 11:11).
இன்று பரிசுத்தவானாகிய யோவான்ஸ்நானனைப் சந்திக்கப்போகிறோம். அவருடைய தகப்பன் பெயர் ஆசாரியனாகிய சகரியா. தாயின் பெயர் எலிசபெத். இருவரும் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இயேசுவின் தாயும், யோவான்ஸ்நானனின் தாயும் ஒரே இனத்தவர்கள்.
இவருடைய பிறப்பு ஒரு தேவதூதனால் முன்னறிவிக்கப்பட்டது. இவர் பிறந்த நாள் தொடங்கி, நசரேய பொருத்தனைக்குட்பட்டவராய் இருந்தார். இவர் வளர்ந்தபின், வனாந்தரங்களில் தங்கியிருந்தார். ஒட்டகமயிர் உடையை தரித்தவராகவும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவராகவும் இருந்தார்.
இவர் உடையிலும், உணவிலும் கட்டுப்பாடும், பிரதிஷ்டையும் இருந்தது. உலகத்தாரைப்போல பகட்டாக வாழாமல், வாழ்க்கையிலே எளிமையையும், தாழ்மையையும் காண்பித்தார். உலகத்தோடு ஒத்துவாழவுமில்லை. உலக ஜனங்களைப் பிரியப்படுத்தி ஊழியம் செய்யவுமில்லை. இயேசுகிறிஸ்துவைவிட ஆறுமாதம் முதியவராய் இருந்தபோதிலும், இயேசுவை உயர்த்துகிறவராகவும், இயேசுவைக்குறித்து சாட்சிகொடுத்து, ஜனங்களை இயேசுவண்டை வழிநடத்துகிறவராகவும் இருந்தார்.
“அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” (யோவா. 3:30) என்பதே யோவான் ஸ்நானனின் குறிக்கோளாய் இருந்தது. இயேசுவைக்குறித்து தேவகுமாரன் என்றும், உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றும் சாட்சிகொடுத்தார் (யோவா. 1:29).
உங்களுடைய வாழ்க்கையிலும் எப்பொழுதும் இயேசுவை உயர்த்துங்கள். யோவான்ஸ்நானனைப்போல உங்களைத் தாழ்த்தி, கர்த்தருடைய நாமத்தை உயர்த்துங்கள். அதைவிட பெரிய பாக்கியம் வேறு ஒன்றுமில்லை.
யோவான்ஸ்நானனிடம் ஜனங்கள் வந்து, “நீர் யார்?” என்று கேட்கையில் யோவான் தன்னை ஒருபெரிய தீர்க்கதரிசியாகவோ, ஊழியக்காரனாகவோ உயர்த்தி மேன்மைப்படுத்திச் சொல்லவில்லை. தன்னுடைய அந்தஸ்த்தையோ, குடும்பத்தையோ, அழைப்பையோகுறித்து எந்தவிதத்திலும் பெருமைபாராட்டாமல், “நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்று சொன்னார் (யோவா. 1:23). எவ்வளவு தாழ்மை பாருங்கள்!
யோவான்ஸ்நானனுக்கு ஒரே ஒரு வேலையைக் கர்த்தர் நியமித்திருந்தார். அது ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகும். மனந்திரும்புதலுக்கென்றும், பாவமன்னிப்புக்கென்றும் யோர்தான் நதிகரையிலே ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். அந்த ஒரு கடமையில் அவர் உண்மையும் உத்தமமுமாய் இருந்தார்.
ஆகவே, தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும்கூட, தன்னைத் தாழ்த்தி யோவான்ஸ்நானனின் கைகளிலே ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களைமட்டும்தான் கிருபையாய் உயர்த்துகிறார்.
நீங்கள் கர்த்தருக்குமுன்பாகவும், ஊழியக்காரர்களுக்குமுன்பாகவும் மனத்தாழ்மையோடு நிற்பீர்களானால், கர்த்தர் உங்களை நிச்சயமாகவே உயர்த்தி ஆசீர்வதிப்பார். தேவபிள்ளைகளே, இந்த உலகத்தில் நமக்கு மேன்மைபாராட்ட ஒன்றுமே இல்லை. கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோமாக.
நினைவிற்கு:- “யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்’’ (மத். 3:1,2).