No products in the cart.
அக்டோபர் 27 – தானியேல்!
“தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது” (தானி. 6:28).
இன்று நாம் சிறந்த வேத அறிவுகொண்டவரும், சமர்த்தனும், பொருத்தனை செய்யப்பட்டவரும், வல்லமையான தீர்க்கதரிசியுமான ஒருவரை சந்திக்கப்போகிறோம். அவர்தான் தானியேல். தானியேலுக்கு கர்த்தர் விசேஷித்த ஞானத்தையும் கிருபையையும் கொடுத்திருந்தார். பாபிலோன் தேசத்திலுள்ள சகல ஞானிகளையும்விட தானியேல் பத்துமடங்கு சமர்த்தராக விளங்கினார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
தானியேல் இவ்வளவாய் மேன்மையடைவதற்கு காரணம் என்ன? கர்த்தருக்காக பரிசுத்தமாய் வாழும்படி அவர் கொண்டிருந்த தீர்மானம்தான். பாபிலோன் தேசத்திற்குள் செல்லும்போதே, தீட்டுப்படாமல், பரிசுத்தமாய்ப் பாதுகாத்துக்கொள்ள தானியேல் உறுதியாயிருந்தார். இராஜாவின் போஜனமும், அவர் பானம்பண்ணும் திராட்சரசமும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது என்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டார். தன்னை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டார் (தானி. 1:8).
ஒருநாள் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், ஒரு சொப்பனத்தைக்கண்டு கலங்கினார். அவர் சாஸ்திரிகளையும், ஜோசியரையும், சூனியக்காரரையும், கல்தேயரையும், அழைக்கச்சொல்லி தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை அவர்கள் சொல்லவேண்டுமென்று கட்டளையிட்டார். “அப்படிச் சொல்லாவிட்டால், நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள். உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்” என்று கட்டளை பிறப்பித்தார்.
தானியேல் இராஜாவிடம் சென்று, தனக்கு தவணைக்கொடுத்தால், சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூறுகிறேன் என்றார். அப்படியே தானியேல் ஜெபித்தபோது, கர்த்தர் அவருக்கு மறைபொருளை வெளிப்படுத்திக்கொடுத்தார்.
கர்த்தர் மறைபொருளை வெளிப்படுத்திக் கொடுக்கிறவர். ஆவியின் வரங்களிலே ஒரு வரம் அறிவைப் போதிக்கிற வரம். ஒரு நபரைப்பற்றியோ, ஒரு சூழ்நிலையைப்பற்றியோ, ஒரு இடத்தைப்பற்றியோ, ஒரு பிரச்சினையைப்பற்றியோ ஆண்டவர் உங்களுக்கு மறைபொருளை வெளிப்படுத்திக்கொடுப்பதினால், தேவஅறிவின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்வீர்கள். இப்படித்தான் கர்த்தர் அப். யோவானுக்கு பத்மு தீவிலே, இனி வரப்போகிற சம்பவங்களை வெளிப்படுத்திக்கொடுக்க சித்தமானார்.
தானியேலின் தீர்மானம் நம் உள்ளத்தைக் கவருகிறது. இராஜாவாகிய தரியு, தன்னைத்தவிர எந்த தேவனையாகிலும், மனுஷனையாகிலும் நோக்கி விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கக்கெபியிலே போடப்படவேண்டும் என்று சட்டம் இயற்றியபோதிலும், தானியேலோ, கர்த்தரை நேசித்தபடியால், தான் முன் செய்துவந்தபடியே மூன்று வேளையும் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் (தானி. 6:10).
என்ன வந்தாலும் சரி, கர்த்தரை வழிபடுவதை நிறுத்தப்போவதில்லை. மனுஷனை வழிப்படபோவதில்லை என்று தானியேல் தீர்மானத்ததினால், அவரைக் கட்டி சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ஆனால், தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களை கட்டிப்போட்டு தானியேலைக் காப்பாற்றினார். பாபிலோனிலே உயர்த்தினார் (தானி. 6:22).
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கும்போது, நிச்சயமாகவே அவர் உங்கள்பட்சத்தில் நிற்பார்.
நினைவிற்கு:- “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானி. 12:3).