No products in the cart.
அக்டோபர் 26 – எசேக்கியேல்!
“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசே. 22:30).
இன்றைக்கு நாம் சந்திக்கப்போகிறது கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் ஆகும். எசேக்கியேல் என்ற வார்த்தைக்கு, தேவனுடைய பலம் என்று அர்த்தம். இவர் பூசியென்னும் ஆசாரியனின் மகன். பெரிய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிற ஏசாயா, எரேமியா, தானியேல் ஆகியோர் வரிசையில் இவரும் வருகிறார். இவர் ஏறக்குறைய இருபத்திரண்டு வருடங்கள் தொடர்ந்து கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து தீர்க்கதரிசனம் உரைத்தார்.
அன்றைக்கிருந்த தேசங்களின் பாவங்களுக்குண்டான தண்டனை என்ன என்பதையும், நியாயத்தீர்ப்பு என்ன என்பதையும் இவர் முன்னறிவித்தார். இஸ்ரவேல் ஜனங்களின் இறுதி மீட்பையும், எருசலேமில் அமைக்கப்படும் தேவாலயத்தையும்குறித்தும் தீர்க்கதரிசனமாக உரைத்தார். உலகத்தின் முடிவிலே அந்திக்கிறிஸ்து எருசலேமுக்கு வரும்போது, கர்த்தர் எவ்விதமாய்ப் போராடுவார் என்பதையும் திட்டமும், தெளிவுமாய் ஜனங்களுக்கு அறிவித்தார்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி நேபுகாத்நேச்சாரால் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர். இவரது தீர்க்கதரிசனங்களில் கண்டிப்பும், கர்த்தருடைய அன்பும் வெளியாகிறது.
“இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:4). “நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்” (எசே. 36:24).
கர்த்தர் உங்களை தேசத்திற்குக் காவலாளியாக வைத்திருக்கிறார். உங்களுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், தேசமக்கள் என அனைவரின் இரத்தப்பழியும் உங்கள்மீது இருக்கிறது. இவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதும், இவர்களுக்காக கண்ணீரோடு மன்றாடுவதும் உங்கள் தோளின்மேல் விழுந்த கடமை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? உங்களையல்லாமல் இவர்களுக்கு யார் கிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளக்கூடும்?
ஆகவே மனிதரைப் பிரியப்படுத்தி ஊழியம் செய்யாமல், கர்த்தரைப் பிரியப்படுத்தி மனப்பூர்வமாய் ஊழியம் செய்யுங்கள். தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்யுங்கள். அது என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தரும்.
இந்த உலகத்தின் கடைசி நாட்களுக்குள் வந்திருக்கிறோம். உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் தரிசனத்தைக் கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியின்மூலம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிரேதக் குழியிலுள்ளவர்களும் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது.
ஒரு காலத்தில் உலர்ந்த எலும்புகளைப்போல பல தேசங்களில் சிதறிக்கிடந்த இஸ்ரவேல் ஜனங்கள் 1948-ல் சுதந்திரம்பெற்று, தங்களுடைய தேசத்திலே வந்து சேர்ந்திருக்கிறார்கள். காலூன்றி, பெரிய சேனையாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாமும்கூட, கர்த்தருடைய ஆவியினாலே உயிரடைந்து காலூன்றி நிற்போமாக. கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாவோமாக.
நினைவிற்கு:- “எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்” (எசே. 37:10).