No products in the cart.
அக்டோபர் 25 – எரேமியா!
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே. 1:5).
இன்றைக்கு நாம் சந்திக்கிற தேவனுடைய ஊழியக்காரனின் பெயர் எரேமியா என்பதாகும். அனைவரும் எரேமியாவை, கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கிறார்கள். சிறுவயதிலேயே கர்த்தர் எரேமியாவை தம்முடைய மகிமையான ஊழியத்திற்கென்று அழைத்தார்.
எரேமியா அதைத் தட்டிக்கழிக்கும்வகையில் பல சமாதானங்களைச் சொல்லிப்பார்த்தார். “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன். சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்றார். “ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்றார்.
பாபிலோனியர், இஸ்ரவேலருக்கு விரோதமாய் வந்தபோது, அவர்கள் எரேமியாவுக்கு அதிக பொல்லாப்பு செய்தார்கள். ஆனால் தேவன் எரேமியாவை திடப்படுத்தி, பலப்படுத்தி, அவரை அரணான வெண்கல அலங்கமாக்கினார். ஆகவே, எரேமியா தைரியமாய் ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும் எதிர்த்து நின்று தீர்க்கதரிசனம் உரைத்தார். “கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்” (எரே. 1:9,10) என்றான்.
பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனார்கள் (எரே. 37:11). அப்பொழுது ஜனங்கள் அவரைப் பிடித்து, ஒரு பாழும்கிணற்றில் போட்டார்கள். கர்த்தர் அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். சில மாதங்களுக்குப் பின்பாக பாபிலோனியர் திரும்பவும் வந்து, எருசலேம் பட்டணத்தைப் பிடித்து சுட்டெரித்தார்கள்.
அப்போது எரேமியா புலம்பல்பாடி தன் துக்கத்தை வெளிப்படுத்தினார். அந்த புலம்பலின்மூலமாக அவர் எவ்வளவாக கர்த்தரையும், தேவஜனங்களையும் நேசித்தார் என்பதையும், தேவஜனத்தின் பின்மாற்றத்தைத் தாங்கமுடியாமல் அவர் எவ்வளவு கண்ணீர் சொரிந்தார் என்பதையும் அறிந்துகொள்ளலாம். உண்மையான தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரின் இருதயத்துடிப்பை அறிந்து, அவருடைய சந்நிதானத்திலே தேசத்துக்காக மன்றாடுகிறார்கள். அப்படிப்பட்ட மன்றாட்டின் ஆவியினால் கர்த்தர் உங்களை நிரப்புவாராக.
எரேமியா சொல்லுகிறார், “ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்” (எரே. 9:1). கர்த்தர் வேதப்புத்தகத்தில் அநேக பரிசுத்தவான்களையும், தீர்ககதரிசிகளையும் நமக்கு முன்பாக நிறுத்தியிருக்கிறார். அவர்கள் கர்த்தருக்காக நின்றதால் காலத்தால் அழியாதபடி இன்றைக்கும் நம்மோடுகூட பேசுகிறார்கள்.
தேவபிள்ளைகளே, எரேமியா கர்த்தருடைய நுகத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டு, ஊழியம் செய்ததுபோல, நீங்களும் கர்த்தரோடு இணைந்து நின்றுவிடுங்கள்.
நினைவிற்கு:- “அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்” (எரே. 33:16).