bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, AppamAppam - Tamil

அக்டோபர் 21 – ஈசாக்கு!

“அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்; அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக….” (ஆதி. 17:19).

பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்களின் வரிசையிலே, ஈசாக்கு இரண்டாவதாக இடம்பெறுகிறார். “ஈசாக்கு” என்ற பெயருக்கு புன்னகை, மனமகிழ்ச்சி, நகைப்பு, சந்தோஷமான சிரிப்பு என்றெல்லாம் அர்த்தமாகும். ஈசாக்கு பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர். இஸ்மவேல் பிறப்பதற்குமுன்பு அந்த பிறப்பைக் குறித்து தேவதூதன் அறிவித்தான்.

ஈசாக்கு, வாக்குத்தத்தத்தின்படியே பிறந்த குமாரன். இஸ்மவேலோ, மாம்சத்தின்படி பிறந்த குமாரன். அடிமையாகிய ஆகாரிடம் பிறந்தவன். வேதம் சொல்லுகிறது, “சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன், ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது” (கலா. 4:28,29).

இஸ்மவேல் எவ்வளவுதான் ஈசாக்கைப் பகைத்தாலும், பரியாசம்பண்ணினாலும், ஈசாக்கு சிரித்துக்கொண்டேயிருந்தார். அவருடைய பெயரே நகைப்பு அல்லவா? நீங்கள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாயிருந்தால், உங்களுக்குள் எப்போதும் புன்னகையிருக்கும். கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியிருக்கும். நீங்கள் பகையை உள்ளத்தில் வைத்துக்கொண்டிராமல், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பீர்கள் (பிலி. 4:4). நீங்கள் புன்னகையின் மைந்தர்களாயிருக்கும்படி கர்த்தர், உங்களை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணுகிறார் (சங். 45:7).

ஒரு பக்கம், ஈசாக்கின் சந்ததியான யூதர்களுக்கும், இஸ்மவேலரின் சந்ததியான அரேபியர்களுக்கும் யுத்தமும், பகை உணர்வும் குடிகொண்டிருந்தாலும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம், கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருக்கிறோம். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10).

ஆகவே இந்தக் கடைசிகாலத்திலே நீங்கள் கர்த்தரில் மகிழ்ந்துகொண்டிருக்கும்படி, ஆனந்தத்தைல அபிஷேகத்தையும், ஆராதனையின் அபிஷேகத்தையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். உங்களுடைய மகிழ்ச்சி, துதியின் சத்தமேயாகும். உலகத்தில் எவ்வளவுதான் வன்முறைகள் நடந்துகொண்டிருந்தாலும், நீங்களோ கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள்.

ஆபகூக் தீர்க்கதரிசி சொல்லுகிறார், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும் தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆப. 3:17,18). தேவபிள்ளைகளே, எத்தனை மனிதர் உங்களைப் பகைத்தாலும், பரியாசம்பண்ணினாலும், கர்த்தருடைய சமுகத்திலே உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.

உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற தீய மனிதர்கள், ஒருநாளும் உங்களை மேற்கொள்ளுவதில்லை. யோசபாத் இராஜா மகிழ்ச்சிக்குரிய, துதியின் ஆயுதத்தை எடுத்தபோது, பகைவர்கள் தங்களுக்குள்ளே வெட்டி மடிந்துபோனதுபோல, தீய மனிதர்கள் அழிந்துபோவார்கள். நீங்களோ, மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள்.

நினைவிற்கு:- “நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்” (சங். 126:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.