No products in the cart.
அக்டோபர் 15 – மலையின்மேல் ஏறி!
“அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்” (மத்.5:1).
மலையில் ஏறி, நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்துகாட்டினவர் இயேசு. ஒரு பெரிய இராணுவத் தளபதிபோல அவர் நம் முன்னே ஏறுகிறார். “ஏறிவாருங்கள்” என்று அன்போடு அவர் அழைக்கும்போது மலையேற விருப்பமுள்ள திரளான ஜனங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி மலையில் ஏறுகிற காட்சியைக் கண்முன் கொண்டுவாருங்கள். எப்படியோ ஏறி வந்து சேர்ந்துவிடுங்கள் என்று சொல்லாமல், மாதிரியைக் காண்பித்து, அதைப் பின்பற்றி மலையேறுமாறு அவர் அழைக்கிறார்.
உங்களை ஏறிவரப் பண்ணும்படியாகத்தான், அவர் உங்களுக்காக பரலோக மேன்மைகளைத் துறந்து, பூமியின் தாழ்விடங்களில் இறங்கிவந்தார். உங்களை உயர்த்தும்படி, தம்மைத்தாமே தாழ்த்தினார். உங்களை ஐசுவரியவான்களாக்கும்படி, அவர்தாமே தரித்திரரானார். உங்களை இராஜாக்களாக்கும்படி அடிமையின் ரூபம் எடுத்தார். நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி, உங்களுக்காக மலை ஏறிச்சென்றார்.
மலையின் அடிவாரத்தில் அவர் சந்தித்த ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்? வேதம் சொல்லுகிறது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்” (மத்.9:36).
மலையின் அடிவாரத்திலே, இன்றைக்கும்கூட ஒரு கூட்ட ஜனங்கள் ஒரு குறிக்கோளே இல்லாமல், தங்கள் விருப்பப்படி அலைந்து திரிகின்றனர். தங்கள் மேய்ப்பன் யார் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தங்களுடைய மேய்ப்பனை அறியாததினால், இம்மைக்கே முக்கியத்துவத்தைத் தந்து பரிதாபமான வாழ்க்கை வாழுகிறார்கள். உலக வாழ்க்கையின் நோக்கமும் அவர்களுக்கு தெரிவதில்லை. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியும் தெரிவதில்லை.
திரளான எலும்புகள், எலும்பு பள்ளத்தாக்கிலே உலர்ந்து போய்க் கிடந்ததை எசேக்கியேல் தீர்க்கதரிசி கண்டார் (எசேக்.37:1-6). இதுதான் இன்றைய ஜனங்களின் நிலை. பிரச்சனைகளின் மிகுதியால் நம்பிக்கை இழந்து, நடைப்பிணங்களாய் அவர்கள் காட்சியளிக்கிறார்கள். கர்த்தருடைய வசனமும், பரிசுத்த ஆவியின் வல்லமையும்தான் இவர்களை உயிர்ப்பிக்கவேண்டும்.
ஒவ்வொரு வினாடி நேரமும் நீங்கள் நித்திய இராஜ்யமாகிய பரலோகத்தை நோக்கி ஏறிக்கொண்டேயிருக்கவேண்டும். மரணத்திற்குச் செல்லும் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. மனம்போல வாழுகிறவர்கள் பாதாள வாசலிலே சறுக்கி, கீழே இறங்குகிறார்கள். அக்கினிக் கடலிலே தொப்பென்று விழுகிறார்கள். ஆனால் ஜீவனுக்கு ஏறும் பாதையோ, இடுக்கமும், நெருக்கமுமானது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்தான்.
தேவபிள்ளைகளே, ஜீவ வாசலாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் உன்னதத்திற்கு ஏறிச்செல்லவேண்டும் என்பதே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கட்டும்.கர்த்தர் திரள் கூட்ட ஜனங்களிலிருந்து ஒரு கூட்டத்தை தமக்கென்று பிரித்தெடுத்து அவர்களை உத்தமர்களாக, பரிசுத்தவான்களாக ஏறி வரப்பண்ணுகிறார். மறுரூபமாக்குகிறார்! மகிமையின்மேல் மகிமையடையச் செய்கிறார். அவர்களில் நீங்களும் ஒருவராக இடம்பெறவேண்டும் அல்லவா?
நினைவிற்கு:- “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” (தானி.12:2).