No products in the cart.
அக்டோபர் 08 – காலேப்!
“அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்” (யோசு. 14:13).
இன்றைக்கு கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின, காலேப் என்ற பராக்கிரமசாலியை சந்திக்கவிருக்கிறோம். காலேப் என்ற வார்த்தைக்கு திராணியுள்ளவர், திறமையுள்ளவர், தைரியமுள்ளவர் என்றெல்லாம் அர்த்தங்களுண்டு. தேவனுடைய பிள்ளைகள் இந்த குணாதிசயங்களோடு கர்த்தருக்காக ஜீவிக்கவேண்டும். அரியபெரிய காரியங்களை நடப்பிக்கவேண்டும்.
கர்த்தரை உத்தமமாய் பின்பற்றிய காலேப், மோசேக்கும், யோசுவாவுக்கும் நம்பிக்கைக்குரிய பாத்திரவானாகக் காணப்பட்டார். மோசே, பன்னிரண்டுபேரைத் தெரிந்தெடுத்து, கானான் தேசத்தை வேவுபார்க்க அனுப்பியபோது, அதில் பத்துப்பேர் துர்ச்செய்தியைக் கொண்டுவந்தார்கள். கானானிலுள்ள மக்கள், ஏனோக்கின் புத்திரர் என்றும், இராட்சதப்பிறவிகள் என்றும், அங்குள்ள பட்டணங்கள் எல்லாம் அரணிப்பானவை என்றும், கானானியரின் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருந்தோம் என்றும் அவர்கள் சொன்னதால் இஸ்ரவேலர் மனம்சோர்ந்துபோனார்கள்.
ஆனால், மற்ற இரண்டுபேராகிய யோசுவாவும், காலேபும் ஜனங்களை அமர்த்தி, “கர்த்தர் நம்மில் பிரியமாயிருக்கிறார். அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கானானியரை காத்து நின்ற நிழல், அவர்களை விட்டு விலகிப்போய்விட்டது. நாம் எளிதாய் மேற்கொள்ளலாம்” என்றார்கள். விசுவாச வார்த்தைகளைப் பேசின அவர்களைக்குறித்து, கர்த்தர் மனமகிழ்ந்தார். எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் யோசுவாவும், காலேபும்மட்டுமே கானானுக்குள் பிரவேசித்தார்கள்.
காலேப் வயதான நாட்களிலும் பலசாலியாகவும், யுத்தவீரனாகவும், தைரியமுடையவராகவும் இருந்தார். அவர் யோசுவாவின் முன்பாக நின்று, “இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார். …. இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது. …. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்” (யோசு. 14:10-12) என்று கேட்டார்.
தன் வயோதிப நாட்களிலும், காலேப் தன்னுடைய விசுவாசத்தைவிட்டு, இறங்கவில்லை. கர்த்தருடைய பலத்தின்மேல் நம்பிக்கையாய் இருந்து, மலைநாட்டை எனக்குத் தாரும் என்று கேட்டார். அவருடைய உள்ளம் பள்ளத்தாக்குகளிலே ஓய்வு எடுக்க விரும்பாமல், கடைசி மூச்சிருக்கும்வரையிலும், பெரிய காரியங்களைச் செய்யவேண்டுமென்று வாஞ்சித்தது.
தேவபிள்ளைகளுக்கு ஓய்வுபெறும் நாள் என்று ஒன்றுமேயில்லை. அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் அறுபது வயதில் தன்னிடம் வேலை செய்கிறவர்களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிடுகின்றன. ஓய்வுபெறும்போதே, அநேகர் சோர்ந்துபோய்விடுவார்கள். உடலில் பெலனிருந்தாலும், உள்ளத்தில் தளர்ச்சியடைந்துவிடுகிறார்கள். ஆனால் காலேபோ, முதிர்வயதிலும் கனிதந்து திரட்சியாயிருந்தார்.
தேவபிள்ளைகளே, உங்கள் நாளுக்குத்தக்கதாக உங்கள் பெலனும் இருக்கும். ஆகவே, கர்த்தருக்குள் பெலன்கொண்டு அவருடைய ஊழியத்தைச் செய்யுங்கள்.
நினைவிற்கு:- “நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது” (சங். 103:5).