No products in the cart.
அக்டோபர் 07 – யோசுவா!
“யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்” (யாத். 17:13).
இன்றைக்கு கர்த்தருடைய தாசனும், யுத்தவீரனுமாயிருக்கிற யோசுவாவை சந்திக்கப்போகிறோம். உள்ளத்திலும், வெளித்தோற்றத்திலும் நிச்சயமாகவே யோசுவா பலத்த பராக்கிரமசாலியாய் இருந்திருக்கவேண்டும். யோசுவா என்ற பெயருக்கு, யெகோவா என் மீட்பர் என்பது அர்த்தம்.
இவர் எப்பிராயீம்கோத்திரத்து நூனின் குமாரன். எகிப்திலிருந்து மோசேயோடு புறப்படும்போது இவருக்கு நாற்பது வயது. மோசே இஸ்ரவேலரின் சேனாதிபதியாக யோசுவாவைத் தெரிந்துகொண்டார். யோசுவா அமலேக்கியரை பட்டயக்கருக்கினால் முறியடித்தார்.
அமலேக்கு என்பது மாம்சத்தைக் குறிக்கிறது. மாம்ச இச்சையே ஒவ்வொரு விசுவாசியோடும் போரிடுகிற ஒரு பயங்கரமான சத்துருவாகும். ஒருபக்கத்தில் மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும் நாம் சிலுவையில் அறையவேண்டும். மறுபக்கம் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய வேதவசனத்தால், மாம்சத்தின் வல்லமையை முறியடிக்கவேண்டும் (எபி. 4:12). வேதம் சொல்லுகிறது, “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).
மோசே இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்து எல்லைவரையிலும் வழிநடத்திக்கொண்டுவந்தார். பிறகு யோசுவாவை இஸ்ரவேலருக்கு தலைவனாகவும், சேனைத் தளபதியாகவும் நியமித்து, தன்னுடைய ஸ்தானத்திலே அபிஷேகம்பண்ணினார் (உபா. 34:9). புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட யோசுவா, கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு, தேவசித்தத்தின்படியே இஸ்ரவேலரை வழிநடத்திவந்தார்.
அவர் முதலில் யோர்தான் நதியைக் கடக்கவேண்டியிருந்தது. அதன் பின்பு கானானிலுள்ள ஏழு ஜாதிகள்மேலும், முப்பத்தியொரு இராஜாக்கள்மேலும் யுத்தம்செய்து, ஜெயங்கொள்ளவேண்டியதாயிருந்தது. இதற்கு ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் பிடித்தன. அதற்குப் பிற்பாடு கானான் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு பங்கு பிரித்தார்.
யோசுவா மோசேயை தாழ்மையோடும், பணிவோடும் பின்பற்றிவந்தார். தன்னைத்தானே யோசுவா உயர்த்திக்கொள்ளவில்லை. ஏற்றகாலத்தில் கர்த்தர் உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருந்தார். ஆண்டவராகிய இயேசுவும்கூட, பூமியிலிருந்த நாட்களில் மிகவும் தாழ்மையோடு பணிவிடைசெய்கிறவராக இருந்தார். அவர் ஊழியம்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகருக்காக தன்னுடைய ஜீவனை பானபலியாக வார்க்கவுமே வந்தார். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (மத். 20:26).
யோசுவாவின் அடுத்த உத்தமமான குணாதிசயம், அவர் கர்த்தரை நேசித்தார் என்பதே. கர்த்தருடைய பிரசன்னத்தை வாஞ்சித்தபடியால், யோசுவா ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தார் (யாத். 33:11). ஆசரிப்புக்கூடாரத்தில் கிருபாசனமும், சேராபீன்களும், குத்துவிளக்குகளும், சமுகத்து அப்பமும், தூபபீடமும் இருந்தன.
தேவபிள்ளைகளே, இயேசுவைவிட்டு நீங்கள் பிரியக்கூடாது. சபைகூடுதலை விட்டுவிடக்கூடாது. தேவபிரசன்னத்தை எப்போதும் நாடுங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று” (யோசு. 6:27).