No products in the cart.
அக்டோபர் 05 – பூரண ஆயுசு!
“உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்” (யாத். 23:26).
ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிற தேவன், நல்ல சுகமும், பெலனும், ஆரோக்கியமும் தந்து, உங்கள் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவாராக. சாதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி தன்னுடைய வாழ்க்கையிலே பல பருவங்களைக் கடக்கின்றது. முட்டையாய் இருக்கிற பருவம் உண்டு. இலைகளை உண்டு வாழுகிற புழுவின் பருவம் உண்டு. கூட்டுப் புழுவாய் வாழுகிற பருவமும் உண்டு.
முடிவிலே பூரண வளர்ச்சியோடு வண்ணத்துப்பூச்சியாய் பறந்து செல்லுகிற பருவமும் உண்டு. சில வேளைகளிலே முட்டையிலேயே அழிந்துபோகும் அவல நிலையும் ஏற்படக்கூடும். புழுவாய் இருக்கும்பொழுது பறவைகள் கொத்திச்செல்லும் நிலைமையும் ஏற்படக்கூடும். ஆனால் கர்த்தரோ பூரண வளர்ச்சியுடன் உங்கள் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன் என்று வாக்களிக்கிறார்.
ஆதி மனிதனாகிய ஆதாம் 930 வருஷங்கள் உயிரோடு வாழ்ந்தார் (ஆதி. 5:5). ஆனால் பூமியிலே பாவம் பெருகப்பெருக கர்த்தர், “என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சம்தானே அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்” (ஆதி. 6:3). பக்தனாகிய மோசே, “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே” (சங். 90:10) என்கிறார்.
உலகக் கவிஞர், மனுஷனுடைய வாழ்க்கையை, நீர்க் குமிழிக்கு ஒப்பிட்டுப் பேசினான். பக்தனாகிய யாக்கோபு, “கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வாழ்க்கையைப் புகையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் (யாக். 4:14).
மோசே, காலையிலே முளைத்துப்பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும் புல்லுக்கு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசுகிறார் (சங். 90:6). அது நெய்கிறவன் எய்கிற நாடாவிலும் வேகமாய் ஓடுகிறது. நிழல்போல சாய்ந்து போகிறது. “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” (யோபு 14:1). இவை எல்லாவற்றுக்கும் மத்தியிலே கர்த்தர் நின்று, “என் மகனே, மகளே, உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்” என்று வாக்குக் கொடுக்கிறார்.
ஐயோ வியாதி வந்து நொந்து போனேனே, பாதி வயதில் கர்த்தர் என்னை எடுத்துக்கொள்வாரோ, என் பிள்ளைகளுக்கு நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவில்லையே என்று கலங்குகிறீர்களோ கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் ஆயுசை பூரணப்படுத்துவார். “நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (சங். 91:16) என்று கர்த்தர் வாக்களிக்கிறார்.
நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமைக் குறித்து, “ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்” (ஆதி. 25:8) என்று வேதம் சொல்லுகிறது. ஈசாக்கைக் குறித்து வேதம் இவ்வாறு சொல்லுகிறது. “ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி …. தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்” (ஆதி. 35:28,29). தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவார்.
நினைவிற்கு:- “என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்” (நீதி. 9:11) “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” (நீதி. 10:27).