Appam, Appam - Tamil

மே 31 – வசனத்தால் புத்திமான்!

“இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்; அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசு. 1:8).

மகா புத்திமானாய் வாழ்வதில் இருக்கும் இரகசியம், “வேதத்தைக் கைக்கொண்டு நடப்பதாகும்.” யோசுவாவின் காலத்திலே முழு வேதாகமமில்லை. ஆனால் மோசே கற்பித்த நியாயப்பிரமாணம் இருந்தது. கர்த்தர் யோசுவாவிடம், “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக” (யோசு. 1:7) என்று சொன்னார்.

தனக்குக் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பை எண்ணி, யோசுவா கலங்கினார். கானானிலுள்ள ஏழு ஜாதிகளோடும், முப்பத்தியொரு ராஜாக்களோடும் யுத்தம் செய்ய என்ன வழி? கர்த்தருடைய வேதத்தை தியானிப்பதே வழி. வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்…..அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2, 3).

இஸ்ரவேலின் இராஜாக்கள் மகா புத்தியாய் யுத்தம் செய்து, வெற்றிபெற, வேத வசனத்தில் சிறந்திருக்கவேண்டும்.  “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” (சக. 4:6) என்று வேதம் சொல்லுகிறது. கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும், அநேகம்பேரைக்கொண்டாகிலும், கர்த்தரால் ஜெயத்தைக் கொடுக்க முடியும். குதிரை யுத்த நாளுக்காக ஆயத்தமாக்கப்பட்டாலும், ஜெயமோ கர்த்தரால் மட்டுமே வரும்.

இன்றைக்கு நீங்களும்கூட ஒரு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு உங்களுக்கு யுத்தமுண்டு (எபேசி. 6:12). கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, தியானித்து, ஜெபித்து இந்த யுத்தத்தைச் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவீர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன், மிகுந்த தேவ பக்தியுள்ளவராயிருந்து, ஞானத்தையும், விவேகத்தையும் பெற்றுக் கொண்டார். ஆகவே எல்லா யுத்தங்களிலும் வெற்றிமேல் வெற்றி பெற்றார். அதுபோல ஜனாதிபதி ஐசன்ஹோவர் (Eisenhower) பல முடிவுகளை ஜெபத்துக்குப் பின்தான் எடுக்கும் பழக்கமுள்ளவர். வேதாகமத்தை அவர் எப்பொழுதும் தனக்கு முன்பாக நிறுத்தியிருந்தபடியால், அவர் காலத்தில் அமெரிக்க தேசம் மிகவும் செழிப்பாயிருந்தது.

தானியேலின் புத்தியும், ஞானமும், அரசியல் வழிமுறைகளும் தேவனிடத்திலிருந்து வந்தன (தானி. 2:30). தேவபிள்ளைகளே, உங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கானாலும் சரி, அலுவலகத்திலுள்ள பிரச்சனைகளை எதிர்ப்பதற்கானாலும் சரி, தேவன் அருளும் புத்தியும், ஞானமும், விவேகமும் மிகமிக அத்தியாவசியமானவை.

நினைவிற்கு:- “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத். 7:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.