No products in the cart.
மார்ச் 21 – அன்புக்கு கடனாளி!
“ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” (ரோம. 13:8).
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் அன்புகூருகிற கடன் உண்டு. முதலாவது தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். பிறகு தன் சகோதரனிடத்தில் அன்புகூரவேண்டும். கிறிஸ்தவ மார்க்கமே அன்பின் மார்க்கமாயிருக்கிறது. நாம் தேவனிலும், அன்புதான் கிறிஸ்தவ மார்க்கத்தின் முக்கிய சட்டம், முக்கிய பிரமாணம்!
பழைய ஏற்பாட்டிலே பத்து பிரமாணங்கள் இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இரண்டே இரண்டு பிரமாணங்கள்தான் உண்டு. முதலாவது, நாம் தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். இரண்டாவது, நாம் நம்மில் அன்புகூருவதைப்போல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும். இந்த இரண்டு பிரமாணங்களிலும் எல்லா தீர்க்கதரிசனங்களும் பிரமாணங்களும் அடங்கிவிட்டன. எப்படி நாம் கடனாளிகளாய் மாறினோம்? வேதம் சொல்லுகிறது, “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவா. 3:16).
இன்று மற்றவர்கள் தங்களிடத்தில் அன்பு செலுத்தவேண்டுமென்று ஏங்கும் விசுவாசிகளில் பலர் கர்த்தரிடமும் அன்பு செலுத்துவதில்லை, மற்றவர்களிடத்திலும் அன்பு செலுத்துவதில்லை. தங்களுக்கு அன்பின் கடன் ஒன்று இருப்பதும், அதை நிறைவேற்றவேண்டுமென்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை. இயேசுகிறிஸ்து நமக்காக ஜீவனைக் கொடுத்து நம்மை கடனாளியாக்கிவிட்டார். நாம் அன்பின் கடனாளிகள்; மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டிய கடனாளிகள்!
நான் ஒருமுறை ஒரு வாலிப சகோதரனை சந்திக்க நேர்ந்தது. அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து போய்விட்டதை அவர் கவலையோடும், கண்ணீரோடும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். முடிவில், நான் அவருக்காக கண்ணீரோடும் மிகுந்த பாரத்தோடும் ஜெபம்பண்ணிவிட்டு அவரது குடும்பத்தில் சமாதானம் நிலவும் என்று சொல்லி அவரை ஆசீர்வதித்தேன்.
சில வாரங்கள் கழிந்தது. ஒருநாள் அவர் கைகளில் நிறைய இனிப்புகள் வாங்கிக்கொண்டு என்னைப் பார்க்க வந்தார். ‘நான் உங்களுடைய அன்புக்கும், உங்களுடைய ஜெபத்துக்கும் கடனாளியாயிருக்கிறேன். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அன்றைக்கு நீங்கள் மிகுந்த பாரத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கும்போது ஒரு பெரிய சந்தோஷம் என் உள்ளத்தில் வந்தது. நீங்கள் ஜெபித்தபடியே என்னுடைய மனைவியும் என்னோடுகூட வாழும்படி வந்துவிட்டாள். நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்’ என்றார். பாருங்கள், ஒரு சின்ன உதவி செய்யும்போது அவர் தன்னை அன்புக்குக் கடனாளி என்று எண்ணுகிறார்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மேல் வைத்த அன்பினால்தான் அடிமையின் ரூபமெடுத்து பூமியிலே இறங்கிவந்தார். அந்த அன்பினிமித்தம் மனதுருகி ஆயிரமாயிரமான அற்புதங்களைச் செய்தார். மனதுருகி பாரமான சிலுவையைத் தூக்கிக்கொண்டு எருசலேம் வீதியின் வழியே தள்ளாடித் தள்ளாடி நடந்தார். தலையிலே முள்முடி சூட்டப்பட, கொடிய ஆணிகளால் கடாவப்பட, சரீரமெல்லாம் சவுக்குகளினால் அடிக்கப்பட மகிழ்ச்சியோடு தன்னை ஒப்புக்கொடுத்தார். தேவபிள்ளைகளே, அந்த அன்புக்கு ஈடாக நாம் எதைச் செலுத்தமுடியும்?
நினைவிற்கு:- “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங். 116:12,13).
