No products in the cart.
மார்ச் 17 – அன்பினால் தெரிந்துகொண்டார்!
“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபா. 7:6).
கர்த்தர் உங்களைத் தமக்கென்று தெரிந்துகொண்டிருக்கிறார். சொந்த ஜனமாய் தெரிந்துகொண்டிருக்கிறார்! சுவிகாரபுத்திரராய் இருக்கும்படி தெரிந்துகொண்டிருக்கிறார். தம்முடைய மகிமையைப் பகிர்ந்துகொள்ளும்படி உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார். நித்திய நித்தியமாய் அவரோடு வாழும்படி தெரிந்துகொண்டிருக்கிறார்.
அவர் எப்படித் தெரிந்துகொண்டார்? ‘அன்பினாலே அவர் தெரிந்துகொண்டார்!’ என்று வேதம் ஒரே வரியில் சொல்லுகிறது. கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதாலும் தெரிந்துகொண்டார் என்று உபாகமம் 7:8-ல் வாசிக்கிறோம்.
ஆம், அவர் அன்புகூர்ந்து தெரிந்துகொண்டார். வேதம் சொல்லுகிறது, “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளி. 1:6). அந்த அன்பு எத்தனை மேன்மையான அன்பு!
ஆண்டவர் உங்களுடைய தகுதியைப் பார்த்தோ, குணாதிசயங்களைப் பார்த்தோ உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. உங்கள்மேல் அன்பு செலுத்தியதினால் அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். “நான் உங்களைச் சிநேகித்தேன்” (மல். 1:2). “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” (எரே. 31:3) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் உங்களுடைய நற்காரியங்களைப்பார்த்தோ, புண்ணியத்தைப்பார்த்தோ உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. தன்னுடைய அன்பின்படியும் கிருபையின்படியுமே தெரிந்துகொண்டார். அவருடைய கிருபை எத்தனை இனிமையானது! கிருபை என்ற வார்த்தைக்கு “தகுதி இல்லாதவர்கள்மேல் கிறிஸ்து பாராட்டுகிற தேவ தயவு” என்பது அர்த்தமல்லவா?
அன்பினாலும், கிருபையினாலும் மட்டுமல்லாமல், பிதாவின் முன்னறிவிப்பின்படியே கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டார். “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” (1 பேது. 1:2) என்று அப். பேதுரு எழுதுகிறார்.
இந்த வசனத்தை ஆழ்ந்து தியானித்துப்பார்க்கும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் உங்களை முன்னறிவிப்பின்படியே தெரிந்துகொண்டார் என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த முன்னறிவிப்பின்படி இன்னார் இன்னாரை தம்முடைய இராஜ்யத்திற்குத் தெரிந்தெடுக்கவேண்டுமென்று ஆதியிலேயே பிதா முடிவெடுத்திருக்கிறார்.
குலத்தில் ஒருவர், கோத்திரத்தில் ஒருவர், ஊரில் ஒருவர் என்று பல்வேறு சூழ்நிலையிலிருந்து உங்களைத் தமது முன்னறிவிப்பின்படி தெரிந்தெடுத்தார். தேவபிள்ளைகளே, உங்களைப்பற்றி கர்த்தர் முன்னதாகவே அறிந்திருக்கிறார்.
நினைவிற்கு:- “இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக். 2:5).
